×

நெல்லை ஆற்றில் மூழ்கிய வியாபாரி உடல் மீட்பு

நெல்லை, டிச. 11: நெல்லை ஆற்றில் மூழ்கிய சென்னை வியாபாரி உடல் மீட்கப்பட்டது.பாளையங்கோட்டை அருகே உள்ள கலியாவூரைச் சேர்ந்தவர் சம்சுதீன் (45). சென்னை ஆலந்தூரில் குடும்பத்துடன் தங்கியிருந்து இரும்பு வியாபாரம் செய்து வந்தார். நண்பர்கள் 6 பேருடன் சுற்றுலாவாக நேற்று முன்தினம் நெல்லை வந்தனர். பின்னர் அவர்கள் குற்றாலம், மணிமுத்தாறு சென்றுவிட்டு நெல்லை திரும்பினர்.நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் சம்சுதீன் மற்றும் நண்பர்கள் நெல்லை தாழையூத்து அருகேயுள்ள அருகன்குளம் தாமிரபரணி ஆற்றில் குளித்தனர். இதில் எதிர் பாராதவிதமாக சம்சுதீன், சுழலில் சிக்கி நீரில் மூழ்கினார்.

தகவலறிந்த தாழையூத்து போலீசார் மற்றும் பாளை தீயணைப்பு நிலைய வீரர்கள் துணையுடன் சம்சுதீனை தேடும் பணி நடந்தது. ஆனால், இரவு நேரம் என்பதால் மீட்க முடியவில்லை. நேற்று 2வது நாளாக தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் வீரர்கள் மற்றும் போலீசார், தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது நாரணம்மாள்புரம் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தின் கீழ்பகுதியில் சம்சுதீன் உடல் ஒதுங்கியிருந்தது தெரிய வந்தது. அவரது உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலைப்பார்த்து உறவினர்கள், நண்பர்கள் கதறி அழுதனர்.

அதிகம் சாப்பிட்டால்தூக்கம் வருவது ஏன்?தகவல்பலகை
ஒரு மனிதனின் உடலில் சுமார் 5லிட்டர் ரத்தம் உள்ளது. நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனும், நமது உணவில் இருந்து கிடைக்கும் சத்துக்களையும் சுமந்து செல்லும் ரத்தம் உடலின் வெவ்வேறு பாகங்களுக்கும் பாய்ந்து சென்று அவ்வுறுப்புகளை செயல்பட வைக்கிறது.
ஒவ்வொரு பாகத்திற்கும் வெவ்வேறு அளவிலேயே இதன் போக்கு இருக்கும். சாதாரண நிலையில் இதயத்தில் இருந்து வெளியேற்றப்படும் மொத்த ரத்தத்தில் 28 சதவீதம் கல்லீரலுக்கும், 24 சதவீதம் தசைகளுக்கும், 15 சதவீதம் மூளைக்கும், மீதமுள்ள ரத்தம் மற்ற உறுப்புகளுக்கும் பாய்ந்து செல்கிறது. நாம் அதிகமான உணவு உண்டபின் அவ்வுணவை செரிக்க செய்ய, ரத்தமானது அதிகளவில் வயிற்றுப்பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் மூளைக்கு செல்லும் ரத்தத்தின் அளவு குறைகிறது. எனவே மூளையின் செயல்பாடு குறைந்து தூக்கம் உண்டாகிறது. அதிக உணவிற்குப்பின் சிறிது ஓய்வு எடுத்து கொள்வதற்கான எச்சரிக்கையாகவும் இதை எடுத்து கொள்ள முடியும்.

தெரிஞ்சுக்கலாம் வாங்க...
*ஷூக்களில் இரவு நேரத்தில் பாச்சான் உருண்டைகளை போட்டு வைத்தால் பூச்சிகள் நெருங்காது.
* குத்துவிளக்குகளை விபூதியால் தேய்த்து கழுவினால் விளக்குகள் தங்கச்சிலை போல ஜொலிக்கும்.
* பஜ்ஜி பவுடர் காலியாகிவிட்டால் கலவையில் சிறிது மஞ்சள் கலக்கினால் பஜ்ஜி மஞ்சள் நிறமாகவும் பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும்.
* இட்லிப்பொடி செய்யும் போது சிறிது கருவேப்பிலையையும் போட்டு மிக்சியில் அரைத்தால் மணமாக இருக்கும். உடலுக்கும் நல்லது.
* ஈக்கள் மொய்க்கும் இடத்தில் நீரில் சிறிது உப்பை சேர்த்து கழுவினால் ஈக்கள் வராது.

திருநங்கையருக்கு வீடு, கல்வி, விபத்து நிவாரண நிதிதிட்டங்களைதெரிந்துகொள்வோம்
திருநங்கையர் நலவாரியம் சமூகநலத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இங்கு திருநங்கையருக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு கல்விநிறுவனத்தில் கல்வி பயின்றால் அவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். (வேறு துறையினரால் கல்வி உதவித்தொகை பெறவில்லை என்று பள்ளி தலைமையாசிரியரிடம் சான்று பெற வேண்டும்.) இடைக்கால தங்கும்விடுதியில் மூன்றுநாட்கள் தங்கலாம். ரேசன்கார்டு, வீட்டுமனைப்பட்டா, விபத்தினால் கை, கால்களை இழந்தால் நிவாரண நிதி (முதுநிலை அறுவை சிகிச்சை மருத்துவரின் மருத்துவச்சான்று பெற வேண்டும்), 45 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கையர்க்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. (வயதுச் சான்றிதழ், திருநங்கையர் நலவாரிய அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும்.
தொடர்பு முகவரி: மாவட்ட சமூக நல அலுவலர், கலெக்டர் அலுவலக வளாகம், நெல்லை என்ற முகவரிக்கு நேரில் தொடர்பு கொள்ளலாம்.

Tags : businessman ,river ,
× RELATED மங்களகோம்பை செல்லும் சாலையில் புலியூத்து ஆற்றின் குறுக்கே பாலம் தேவை