லோடு ஆட்டோவில் மாடுகள் திருடிய 3 பேர் கைது

ஆறுமுகநேரி, டிச.11: முக்காணியில் நள்ளிரவில் பசு மாடுகள் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து லோடு ஆட்டோ, 2 பசு மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆத்தூர் அடுத்த முக்காணி ரவுண்டானாவில் நேற்று அதிகாலை 1.45 மணியளவில் 3பேர் சேர்ந்த ஒரு பசுமாட்டை கயிற்றினால் கட்ட முற்பட்டனர். அப்போது அங்கு ரோந்து வந்த ஆத்தூர் காவல்நிலையத்தை சேர்ந்த காவலர் சின்னத்துரை, சந்தேகத்தின் அடிப்படையில் தனது பைக்கை நிறுத்தி அவர்களிடம் விசாரித்தார்.

அவர்கள் 3 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். இதனால் சந்தேகம் அடைந்த காவலர் சின்னத்துரை காவல்நிலையத்தில் இரவு காவலில் இருந்த மற்ற போலீசாருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து வரவழைத்தார். பின்னர் அவர்களிடம் விசாரித்ததில் 2 பசுமாடுகளை திருடி வந்ததை ஒப்புக்கொண்டனர். மேலும் முக்காணி ரவுண்டாணாவில் ஒரு மாடு இருப்பதை பார்த்த அவர்கள் அந்த மாடுவை தனது வாகனத்தில் ஏற்றும் போது போலீசாரிடம் சிக்கிக்கொண்டது தெரியவந்தது.

விசாரணையில் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் கண்ணுரை சேர்ந்த கபீர் மகன் ஜாகீர் உஷேன்(34), ஆரல்வாய்மொழி மூவேந்திர நகரை சேர்ந்த கண்ணையா மகன் மகேந்திரகுமார்(43), மணலிக்கரையை சேர்ந்த ஜெயசேகர் மகன் ஜெனீஸ் (25) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து லோடு ஆட்டோ மற்றும் இரண்டு பசு மாடுகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மடத்தூர் பகுதியில் இந்த மாடுகளை திருடியது தெரியவந்ததால் அவர்கள் மடத்தூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.

Related Stories: