×

கஜா புயலில் சாய்ந்த மரங்கள் ஏலம் விடப்பட்டு அகற்றம்

காரைக்கால், டிச.11: தினகரன் செய்தி எதிரொலி காரணமாக, காரைக்காலில் கஜா புயலில் சாய்ந்த மரங்கள், மாவட்ட கலெக்டர் கேசவன் தலைமையில் நேற்று ஏலம் விடப்பட்டு அப்புறப்படுத்தும் பணி தொடங்கியது. காரைக்காலில் கடந்த நவம்பர் 15ம் தேதி காஜா புயல் வீசியது. இந்த புயலில் காரைக்கால் பாரதியார் வீதி, காமராஜர் வீதி, நேரு வீதி,  மற்றும் ஏராளமான நகர்புறங்களில் கிராமப்புறங்களிலும் ஆயிரக்கணக்கான மரங்களும் 200க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. இவற்றில் சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மரங்களை மாவட்ட நிர்வாகமும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் அப்புறப்படுத்தினார்.

ஆனால் வெட்டப்பட்ட மரங்கள், புயலில் சேதமான வீட்டு குப்பைகள் சாலையோரம் இன்னமும் குவிந்து கிடக்கிறது. 22 நாட்கள் ஆகியும் மாவட்ட நிர்வாகம் இதனை சுத்தம் செய்ய முன்வரவில்லை. இவற்றை உடனே சுத்தம் செய்யவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்திய செய்தி கடந்த 8ம் தேதி நமது தினகரனில்  வெளியானது. இந்நிலையில், மாவட்ட கலெக்டர் கேசவன், நேற்று சம்பந்தப்பட்ட பகுதிகளில் சாலையோரம் கிடந்த மரங்களை ஆய்வு செய்து, மாவட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராஜசேகரன் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பொது ஏலம் நடத்தி அப்புறப்படுத்த உத்தரவிட்டார். அதன்படி, காரைக்காலின் முக்கியப் பகுதிகளில் உள்ள சாலையோரம் கிடந்த மரங்கள் பொது ஏலம் விடப்பட்டு அப்புறப்படுத்தும் பணி தொடங்கியது. இன்னும் ஓரிரு நாளில் அனைத்து மரங்களும் அப்புறப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சாலையோரம் உள்ள கஜா புயலுக்கு பிறகு சேர்ந்த குப்பைகள், குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : storm ,Ghaz ,
× RELATED மிக்ஜாம் புயல் வெள்ளத்தால்...