×

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் கடத்தப்பட்ட மகளை மீட்டு தர வேண்டும்

கரூர், டிச. 11: கரூர் கலெக்டர் அலுவலகத்தில் கடத்தப்பட்ட தனது  மகளை மீட்டுத்தர வேண்டும் எனக் கேட்டு குமாரபாளையத்தை சேர்ந்த தாய் கதறி அழுது, கலெக்டரிடம் முறையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர்  கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம்  நடைபெற்றது. இதில் அமராவதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் மற்றும்  காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் மனு கொடுக்க வந்தனர். இயக்க நிர்வாகி முகிலனும் உடன் வந்திருந்தார்.  இவர்கள் அனைவரும் மனுவை ெகாடுத்து விட்டு  வெளியே வந்தனர். அப்போது ஒரு பெண் வாயிலும், வயிற்றிலும்  அடித்துக் கொண்டு எனது மகள் கடத்தப்பட்டுள்ளார். அவளை மீட்டு தாருங்கள்  என கூறியவாறு கலெக்டர் அலுவல நுழைவு வாயிலில் உருண்டு புரண்டு கதறினார்.

முகிலனின் சட்டையையும் பிடித்து கொண்டு பயங்கரமாக சத்தம் போட  ஆரம்பித்தார்.இதனால் கலெக்டர் அலுவலக வளாகம் பரபரப்பானது. சுதாரித்துக் கொண்ட போலீசார், இரு தரப்பினரையும் தனித்தனியே பிரித்து அனுப்பினர். பின்னர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த பெண் கஸ்தூரி(58)  கூறியது: எனது  மகள் ராஜேஸ்வரி எம்சிஏ வரை படித்து விட்டு கடந்த மூன்று மாதங்களுக்கு  முன்பு வேலை பார்ப்பதாக சென்னை சென்றார். அதன்பிறகு அவர் எங்களை தொடர்பு  கொள்ளவில்லை. பல இடங்களிலும் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.  இந்நிலையில் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க நிர்வாகிகளுடன் மகள்  ராஜேஸ்வரியும் இருப்பதாகவும், இன்று(நேற்று) கரூர் கலெக்டர் அலுவலகம் வரவுள்ளனர்  என்ற தகவல் கேள்விப்பட்டு இங்கு வந்தேன். எனது மகள் கடத்தப்பட்டுள்ளார்.  அவரை மீட்க உதவ வேண்டும் என்றார்.

ராஜேஸ்வரி கூறுகையில், எனக்கு  வேலை பார்ப்பதில் ஆர்வமில்லை. சமூக சேவையாற்ற வேண்டும் என்ற கொள்கையினால்  காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தில் சேர்ந்து ஒருங்கிணைப்பு குழுவில்  உள்ளேன். என்னை யாரும் கடத்தவில்லை. எனது  விருப்பத்தின்பேரில்தான் இந்த இயக்கத்தில் உள்ளேன் என்றார்.இதனைத் தொடர்ந்து கஸ்தூரி உடன் வந்த  உறவினர்களுடன் கலெக்டர் அன்பழகனை சந்தித்து, மகளை மீட்க நடவடிக்கை  எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுத்தார். மனுவினை பெற்றுக் கொண்ட  கலெக்டர், சம்பந்தப்பட்ட இடத்தில் புகார் கொடுங்கள். பின்னர் இது குறித்து  விசாரணை நடத்தப்படும் என கூறி அனுப்பி வைத்தார்.

மாட்டு வண்டி உரிமையாளர்கள் மனு:  கரூர் மாவட்ட அமராவதி மற்றும் காவிரி மாட்டு வண்டி உரிமையாளர்கள் சங்கத்தினர் வழங்கிய மனுவில்,கரூர் மாவட்டத்தில் வசித்து வரும் நாங்கள் விவசாயம் மற்றும் கால்நடைகள் வளர்ப்பு ஆகிய தொழில்கள் செய்து வருகிறோம். தற்போது மழையின்றி, விவசாயம் பொய்த்து விட்டது. இந்நிலையில் அமராவதி ஆற்றில் கால்நடைகள் மூலம் மாட்டு வண்டியில் மணல் அள்ளி கரூர் மாவட்ட மக்களின் கட்டுமான பணிகள், அரசு கட்டிக் கொடுக்கும் பசுமை வீடுகள், அனைவருக்கும் வீடு கட்டும் திட்டங்களுக்கும் சப்ளை செய்து வந்தோம். ஆனால் கரூர் மாவட்ட நிர்வாகம் அமராவதி ஆற்றில் மணல் அள்ளுவதை தடை செய்துள்ளது. எனவே அமராவதி ஆற்றில் பொதுப்பணித்துறையின் மூலம் உரிய கட்டணம் செலுத்தி மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : Kumarapalayam ,Namakkal district ,
× RELATED வாசிப்பு இயக்கத்தில் பங்கேற்க அழைப்பு