×

அமராவதி ஆற்றில் மணல் குவாரி முடிவை வாபஸ் பெற வேண்டும்

கரூர், டிச. 11: அமராவதி ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் முடிவை வாபஸ் பெற வேண்டும் என கரூர் கலெக்டர் அலுவலகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் மனு கொடுத்தனர். கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் அமராவதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்றில் புலியூர், பள்ளபாளையம், மேலப்பாளையம், பஞ்சமாதேவி, கோயம்பள்ளி ஆகிய கிராமங்களில் மாட்டு வண்டி மூலமாக மணல் அள்ளும் வகையில் மணல் குவாரிகள் அமைக்கப்பட மாவட்ட நிர்வாகத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக அமராவதி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் எடுக்கப்பட்டதன் காரணத்தினால், அமராவதி ஆற்றின் நீர்ப்பிடிப்பு தன்மையும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது அமராவதி ஆற்றில் சீமைக் கருவேல மரங்கள் அதிகளவு வளர்ந்துள்ளன. இதுமட்டுமின்றி கரூர் நகராட்சி கழிவுகளும் நேரடியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. கிராமங்களில் உள்ள ஆற்றுப்பகுதியில் ஒரளவு சரளைக் கல் கப்பியுடன் கூடிய மணல் பகுதிகள் உள்ளன. அவற்றையும் மாட்டு வண்டி மணல் குவாரி மூலமாக எடுக்கப்பட்டு விட்டால் அந்த பகுதியில் அமைந்துள்ள நூற்றுக்கணக்கான சிறு விவசாயிக்ள நீரேற்ற பாசனக் கிணறுகள் கடுமையாக பாதிக்கப்படும்.

அமராவதி ஆற்றில் மணல் எடுக்க நீதிமன்ற தடையுள்ளது. மாவட்ட நிர்வாகத்தில் அமராவதி ஆற்றில் மணல் குவாரி அமைக்க உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது அனைவரின் வாழ்வாதாரத்தை பாதிக்கும். எனவே இதனை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : sand quarry ,river ,Amaravathi ,
× RELATED ஸ்ரீநகர் பகுதியில் ஜீலம் ஆற்றில்...