×

கலெக்டர் அலுவலகத்திற்கு மாற்று திறனாளி மகனுடன் வந்து பெண் கோரிக்கை மனு

கரூர், டிச. 11: கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளி மகனுடன் வீட்டு மனைப்பட்டா கேட்டு சந்திரா என்பவர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: கரூர் காந்திகிராமம் இந்திரா நகர் பகுதியில் வசித்து வருகிறேன். எனது கணவர் என்னை விட்டு பிரிந்து 15 ஆண்டுகள் ஆகிறது. எனக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். எனது மகன் உடல் ஊனமுற்றவர். நடந்து செல்லக் கூட முடியாத நிலையில் அவன் உள்ளான். வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். வேலைக்கு சரியாக போக முடியாத காரணத்தினால் வாடகையும் சரியாக தரமுடியவில்லை. இது குறித்து பலமுறை மனு கொடுத்துள்ளேன். எனவே மாவட்ட நிர்வாக அதிகாரிகள், எனக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கி உதவிட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

பட்டா வழங்க கோரிக்கை: கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா வேட்டமங்கலம் மேல்பாகம் குந்தாணிபாளையம் கழைக் கூத்து நகரைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வழங்கிய மனுவில்,இந்த பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக 80க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் அனைவருக்கும் குடி இருக்க நிலமோ, வீடோ இல்லை. அனைவருக்கும் வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என பலமுறை மனு கொடுத்தும் பட்டா வழங்கப்படவில்லை. எனவே எங்களின் நிலையை கவனத்தில் கொண்டு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

ஆதி தமிழர் பேரவை மனு: ஆதித் தமிழர் பேரவையின் கடவூர் ஒன்றிய நிர்வாகிகள் மாவட்ட கலெக்டரிடம் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது:
கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா மைலம்பட்டியில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். போதிய மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால், அனைத்து நோயாளிகளும் நீண்ட நேரம் காத்திருந்து டாக்டர்களை சந்தித்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.காய்ச்சல் போன்ற சிகிச்சைக்கும், உள்நோயாளிகளை சேர்க்க போதுமான படுக்கை வசதியும் இல்லை. இதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.எனவே பொதுமக்கள் நலன்கருதி, மைலம்பட்டி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி, தேவையான அளவு வசதிகளை செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...