×

சாலைபோட்டு 20 நாட்களில் மீண்டும் பஞ்சரான அவலம்

விழுப்புரம், டிச. 11:  வானூர் அருகே தரமில்லாமல் சாலை போடப்பட்டதால் 20 நாட்களில் மீண்டும் பல்லாங்குழியாகி விட்டதாக புகைப்பட ஆதாரத்துடன் ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர். விழுப்புரம் மாவட்டம் வானூர் குயிலாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியர் சுப்ரமணியனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வனத்தாம்பாளையம் பம்பை ஆறுவரை 1700 மீட்டர் தூரம் சாலையும், 350 மீட்டர் தூரம் சிமெண்ட் சாலையும் போடுவதற்கு கண்டமங்கலம் பிடிஓ அலுவலம் மூலம் ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தார் சாலை அமைக்க ஒப்பந்தம் விடும்போது மிஷன் ரோடுக்கு டெண்டர் விடப்பட்டது. ஆனால் ஒப்பந்தம் எடுத்த நபர் 20 எம்எம் அளவில் கையால் ரோடு போட்டு கொடுத்துள்ளார்.

இதனால் சாலை போட்ட 20 நாட்களிலேயே ஆங்காங்கே மீண்டும் பஞ்சராகி குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனை அறிந்த பொதுமக்கள் கண்டமங்கலம் பிடிஓ மற்றும் ஒப்பந்ததாரரிடம் கேட்டபோது சரியான பதில் கூறாமல் சென்றுவிட்டனர். எங்கள் பகுதியில் எப்போதாவது போடப்படும் சாலையும் சரியாகவும், தரமானதாகவும் போடாமல் உள்ளனர். ஆட்சியர் ஆய்வு செய்தால் சாலையின் தரம் குறித்து உண்மை நிலை வெளிச்சத்திற்கு வரும். மேலும் தரக்கட்டுப்பாட்டு நிர்ணயத்திற்கு ஆய்வு செய்யவும் பரிந்துரைக்க வேண்டும். சாலைப்பணிகள் சரியாக செய்யாமல் உள்ள நிலையில் மீதமுள்ள 350 மீட்டர் தூரத்திற்கு சிமெண்ட் சாலை அமைக்க உள்ளார். எனவே அந்த ஒப்பந்ததாரரின் பணிகளை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : road ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...