₹10 கோடி நிலுவைதொகை வழங்கப்படும்

புதுச்சேரி, டிச. 11:  புதுவை லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய  விவசாயிகளுக்கு ரூ.10 கோடி நிலுவைத்தொகை வழங்குவது எனவும், கரும்பு டன்னுக்கு ரூ.50 கூடுதலாக வழங்குவது எனவும்  முத்தரப்பு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

புதுச்சேரி  கரும்பு விவசாயிகள் முத்தரப்பு கூட்டம் சட்டசபை வளாகத்தில் உள்ள கமிட்டி  அறையில் நேற்று நடந்தது. வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை  தாங்கினார். கூட்டுறவுத்துறை அமைச்சர் கந்தசாமி முன்னிலை வகித்தார்.  டிபிஆர் செல்வம் எம்எல்ஏ, வேளாண்மை துறை இயக்குனர் ராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள், கூட்டுறவு துறை அதிகாரிகள், சர்க்கரை ஆலை அதிகாரிகள், கரும்பு விவசாயிகள்  சங்க தலைவர் செந்தில்குமார்,  விவசாய சங்க பிரதிநிதிகள், 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில், கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2016-17ம் ஆண்டுக்கு  விவசாயிகள் வெட்டி அனுப்பிய கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.3200 வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்ைக விடுத்தனர்.

மேலும் ஆலைக்கு வெட்டி அனுப்பிய  கரும்புக்கு புதுச்சேரி அரசு ரூ.21 கோடி நிலுவை தொகை வழங்க வேண்டி உள்ளது.  அதை உடனடியாக வழங்க வேண்டும். நிலுவை தொகையை காலத்தோடு வழங்காததால் விவசாயிகள் பயிர்  செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அரசு நிலுவையில் உள்ள தொகையை உடனே வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலளித்த  அமைச்சர்கள், தற்போதைய சூழ்நிலையில் புதுச்சேரி அரசு நிதி நெருக்கடியில்  இருப்பதால் நிலுவை தொகையை மொத்தமாக ஒரே தவணையில் வழங்க முடியாத  நிலை உள்ளது. சர்க்கரை மட்டுமே உற்பத்தி செய்வதால், லாபகரமான தொழிலாக இல்லை. இதன்காரணமாக விவசாயிகள் கேட்கும் தொகையை எங்களால் உடனடியாக வழங்க முடிவதில்லை.

இருப்பினும் விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்ற எண்ணத்தில், வரும் பொங்கல் பண்டிகைக்குள் ரூ.10 கோடி நிலுவை தொகையை  வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.  மேலும் 2016-17ம்  ஆண்டு  அரவை செய்யப்பட்ட 65 ஆயிரம் டன் கரும்புக்கு ஏற்கனவே உள்ள 2950 ரூபாயுடன் கூடுதலாக   ரூ.50 சேர்த்து டன்னுக்கு 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க நடவடிக்கை  எடுக்கப்படும். இது தொடர்பாக நிதி செயலர், தலைமை செயலரை அழைத்து  பேசி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர்கள் தெரிவித்தனர். இதனை விவசாயிகள் ஏற்றுக்கொண்டனர். மேலும் ரூ.10 கோடி நிலுவை தொகையை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டுமென மீண்டும் வலியுறுத்தினர்.

இது குறித்து அமைச்சர் கந்தசாமி கூறுகையில்,  கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை, விவசாயிகளுக்கு நிலுவைத்தொகையும் இதுவரை வழங்காததால் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் கரும்புக்கான விலையை உயர்த்தி வழங்க வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை வைக்கிறார்கள். இதனையேற்று விலையை உயர்த்தினாலும், நிலுவையை வழங்கமுடியாத நிலைதான் இருக்கிறது. ரூ.21 கோடியில், முதல்கட்டமாக ரூ.9.5 கோடியை வழங்க முதல்வரிடம் பேசியுள்ளோம்.  தலைமை செயலர், நிதி செயலரை அழைத்து பேசி நிலுவைத்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் சர்க்கரை ஆலைக்கு மேலும் ரூ.4.60 கோடி கூடுதல் செலவாகும் என்றார்.

Related Stories: