சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் நாளை பொது வேலை நிறுத்தம்

புதுச்சேரி, டிச. 11: புதுச்சேரி சேதராப்பட்டு தொழிற்பேட்டை அனைத்து தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைப்பு தலைவர் மோதிலால் அளித்த பேட்டி: புதுச்சேரி தொழிற்பேட்டைகளில் இயங்கி வரும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ, இபிஎப், அடையாள அட்டை, சம்பள ரசீது, ஊதியத்துடன் கூடிய வார விடுமுறை, ஊதியத்துடன் அரசு விடுமுறை, மிகைநேர ஊதியம், இரண்டு மடங்காக ஆண்டுக்கு 240 நாட்களுக்கு மேல் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம், புலம் பெயர்ந்த தொழிலாளர் நலச்சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

 சேதராப்பட்டு தொழிற்பேட்டையை சுற்றியுள்ள உள்ளூர் கிராமங்களில் படித்த இளைஞர்களுக்கு தனியார் தொழிற்சாலையில் 60 சதவீத வேலை வாய்ப்பினை அளிக்க வேண்டும். எல் அண்ட் டி தொழிற்சாலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 184 தொழிலாளர்களுக்கு தொடர் பணியினை வழங்க வேண்டும். தொழிற்சங்க நிர்வாகிகளை பணி நீக்கம் செய்த ஈடோன் நிர்வாகத்தின் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு தொடர் பணியை வழங்க வேண்டும்.

 இக்கோரிக்கைகளை வலியுறுத்தி சேதராப்பட்டு தொழிற்பேட்டை அனைத்து தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நாளை (12ம் தேதி) சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள், ஆலை தொழிலாளர்கள், வியாபாரிகள், அனைத்து கட்சிகள், இயக்கங்கள் ஆதரவு தர வேண்டும்.

Related Stories: