×

எஸ்.நரையூர் கிராமத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கியதில் முறைகேடு

விருத்தாசலம், டிச. 11: வேப்பூர் அருகே உள்ள எஸ். நரையூர் கிராமத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமில் இலவச மனைப்பட்டாவுக்கு பயனாளிகள் தேர்வு செய்து வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக மக்கள் மனு அளித்துள்ளனர். விருத்தாசலம் அடுத்த வேப்பூர் அருகேயுள்ள எஸ்.நரையூர் கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் வீடில்லா ஏழை எளியோருக்கு, அரசு ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் இலவச வீட்டு மனைப்பட்டா திட்டத்தில் 44 பயனாளிகளுக்கு கடந்த மாதம் 29ம் தேதி நடைபெற்ற மனுநீதி விழாவில் கலெக்டர் அன்புச்செல்வன் வழங்கினார். இந்நிலையில் அந்த வீட்டு மனை பட்டாவுக்காக பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டதில் முறைகேடு உள்ளதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று விருத்தாசலம் சார்ஆட்சியர் பிரசாந்தை சந்தித்து மனு அளித்தனர்.

அதில், எங்கள் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருக்க வீடின்றி அரசு புறம்போக்கில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு பட்டா வழங்காமல், வீடு, நிலம், அரசு வேலை ஆகியவைகள் உள்ள எத்தனையோ பேருக்கு, முறைகேடாக பட்டா வழங்கியுள்ளனர். மேலும் அவர்களுக்கு பட்டா வழங்குவதற்காக ரூ.5ஆயிரம் முதல்  ரூ.10ஆயிரம் வரை லஞ்சம் வாங்கிக்கொண்டும் உறவினர்களுக்கும், ஒரே குடும்பத்திற்கு 2 வீட்டு மனை பட்டாக்களும் வழங்கியுள்ளனர். இதில் முறைகேடுகள் அதிகளவில் நடந்துள்ளது. அதனால் அப்போது வழங்கிய 44 பட்டாக்களையும் ரத்து செய்ய வேண்டும். வருவாய்த் துறையினர் மீண்டும் முறையாக ஆய்வு செய்து, உண்மையில் தகுதியுள்ள நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.மனுவை பெற்றுக்கொண்ட சார் ஆட்சியர் பிரசாந்த் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Tags : village ,S. Nairoor ,
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...