நரிக்குறவர்களுக்கு ஒதுக்கிய நிலம் ஆக்கிரமிப்பு

சேலம், டிச.11:  சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே நரிக்குறவர் காலனி உள்ளது. இந்த காலனியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அப்போது நுழைவு வாயில் முன்பு, 50 வருடங்களுக்கு முன்பு தங்களுக்கு வழங்கப்பட்ட 12 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க கோரியும், அந்த இடத்தில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரியும் நடனமாடினர். இதையடுத்து அங்கு பாதுகாப்பிற்கு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், நரிக்குறவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைதொடர்ந்து 4 பேரை மட்டும் கோரிக்கை மனு கொடுக்க உள்ளே அனுமதித்தனர்.

இது குறித்து நரிக்குறவர்கள் கூறுகையில், ‘‘வீரகனூர் நரிக்குறவர் காலனியில் 50 ஆண்டுக்கு முன்பு 12 ஏக்கரில் 55 வீட்டு மனைகளுக்கு பட்டா வழங்கப்பட்டது. நாங்கள் பிழைப்புக்காக வெவ்வேறு இடங்களுக்கு செல்கிறோம். இதை பயன்படுத்திக் கொண்டு சிலர், அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்துவிட்டனர். அந்த நிலத்தை மீட்டு எங்களுக்ேக தர வேண்டும். மேலும் அந்த பகுதியில் அடிப்படை வசதி இல்லாததால், பாம்பு கடித்து 3 பேர் இறந்துள்ளனர். மேலும் அங்கு குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளும் கிடையாது. இதுதொடர்பாக பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதுவரை எங்கள் ேகாரிக்கை எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இதுவே எங்களுடைய கடைசி மனு. இந்த முறையும் நடவடிக்கை எடுக்காவிட்டால், கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம்,’’ என்றனர்.

Related Stories: