×

நாமக்கல் மாவட்டத்தில் 245 விஏஓக்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்

நாமக்கல், டிச.11: நாமக்கல் மாவட்டத்தில், 245 விஏஓக்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிராம நிர்வாக அலுவலகங்களில், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும். இன்டர்நெட் வசதியுடன் லேப்டாப் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விஏஓக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே, இரவு நேர தர்ணா போராட்டம், உண்ணாவிரத போராட்டம் நடத்தியும் இவர்களது கோரிக்கையை அரசு கண்டு கொள்ளாததால், காலவரையற்ற போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

சங்கத்தின் மாவட்ட தலைவர் வேலுசாமி, வட்டதலைவர் செந்தில்கண்ணன் ஆகியோர் தலைமையில் நேற்று காலை, நாமக்கல் தாலுகா அலுவலகம் வந்த கிராம நிர்வாக அலுவலர்கள், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாக கூறி விடுப்பு கடிதத்தை தாசில்தார் (பொ) சந்திரமாதவனிடம் அளித்தனர். பின்னர் வட்டத்தலைவர் செந்தில்கண்ணன் கூறுகையில், ‘கோரிக்கை நிறைவேறும் வரை கிராமங்களுக்கு பணிக்கு செல்லமாட்டோம். சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், முகவரி மாற்றம் சான்று, சிட்டா, அடங்கல் உள்ளிட்ட பணிகள் வேலை நிறுத்தத்தின் காரணமாக பாதிக்கும்.

எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை வேலை நிறுத்த போராட்டம் தொடரும்,’ என்றார்.நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மொத்தம் 245 விஏஓக்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கொல்லிமலை, பரமத்திவேலூர் தாலுகாவில் பணியாற்றும் 60 விஏஓக்கள் நேற்று வழக்கம் போல பணிக்கு வந்தனர். இவர்கள் மற்றொரு சங்கமான தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கத்தில் உள்ளதால், வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

Tags : Namakkal district ,
× RELATED கரூரில் கொல்லிமலை செட் மளிகை பொருட்கள் விற்பனை அமோகம்