×

நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு தண்ணீரின்றி வறண்டு கிடக்கும் ராசிபுரம் ஏரி

ராசிபுரம், டிச.11: ராசிபுரத்தில் நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிப்பால், ராசிபுரம் ஏரி தண்ணீர் வரத்தின்றி முட்புதர்கள் மண்டி காணப்படுகிறது.
ராசிபுரத்தில் இருந்து சேலம் செல்லும் சாலையில், 80 ஏக்கர் பரப்பில் ராசிபுரம் ஏரி அமைந்துள்ளது. கடந்த காலங்களில் இந்த ஏரிக்கு, அலவாய்மலை மற்றும் போதமலையில் இருந்து தண்ணீர் வந்தது. இந்த ஏரியின் தண்ணீரை கொண்டு சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் நெல், கரும்பு, சோளம் உள்ளிட்டவற்றை பயிரிட்டு வந்தனர். ஆனால், காலப்போக்கில் ஏரிக்கு வரும் நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால், தண்ணீர் வரத்து அடியோடு சரிந்தது. இதன் காரணமாக, ஏரியின் பரப்பளவு நாளுக்கு நாள் சுருங்கி வருகிறது. விவசாயிகள் புகாரின் பேரில், வருவாய்த்துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆக்கிரமிப்புகளை அகற்றினாலும், முழுவதும் அகற்றப்படவில்லை. ஆக்கிரமிப்புகளால் ஏற்பட்ட பள்ளங்களால், மழைக்காலங்களில் கூட ராசிபுரம் ஏரிக்கு தண்ணீர் வருவதில்லை.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: ராசிபுரம் ஏரியை நம்பி விவசாயிகள் கரும்பு, ஆமணக்கு, மரவள்ளி கிழங்கு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு வந்தனர். ஆனால், நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் ஏரிக்கு தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்து விட்டது. மழைக்காலங்களில் கூட ஏரி முழுமையாக நிரம்புவதில்லை. இதனால், இந்த ஏரியை நம்பி பாசனம் செய்து வந்த விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளம், குட்டை மற்றும் ஓடை ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறையினர் அகற்ற வேண்டும். மேலும், நீர்வழித்தடங்களை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Tags : Rasipuram Lake ,waterways ,
× RELATED சென்னை-விளாடிவோஸ்டாக் கடல்வழி சரக்கு...