×

மோகனூர் காவிரியின் குறுக்கே 15 அடி உயரத்தில் தடுப்பணை

நாமக்கல், டிச.11: மோகனூர் காவிரியின் குறுக்கே, 15 அடி உயரத்தில் தடுப்பணை கட்டவேண்டும் என குடிநீர் பாதுகாப்பு சங்கத்தினர் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மோகனூர் காவிரி குடிநீர் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த ஜனார்த்தனம், நேற்று கலெக்டர் ஆசியாமரியத்திடம் அளித்த கோரிக்கை மனு விபரம்:மோகனூர் காவிரி ஆற்றில் கடந்த செப்டம்பர் மாதம் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆனால், தடுப்பணை கட்டி தண்ணீரை தேக்கி வைக்காததால் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பயன்படாமல் கடலில் கலந்து தண்ணீர் வீணானது. மேலும், மழை காலங்களில் காவிரி ஆற்றில் வரும் மழை நீர், கடலில் கலந்து வீணாவதை தடுத்து விவசாயத்துக்கும், குடிநீர் தேவைக்கும், நீர்நிலைகளில் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கவும் பயன்படுத்த வேண்டும். இதற்காக நாமக்கல் மாவட்டம் மோகனூர், சம்பாமேடு சங்கிலி கருப்பணார் கோயிலில் இருந்து கரூர் மாவட்டம் வாங்கல், மல்லம்பாளையம் வரை காவிரி ஆற்றின் குறுக்கே 15 அடி உயரத்தில் படுகை தடுப்பணை கட்டவேண்டும். இதன் மூலம் விவசாயம் மேம்படும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.


Tags :
× RELATED வையப்பமலையில் பக்தர்கள் கிரிவலம்