×

ஈழ தமிழர்களுக்கு நீதி வேண்டி பசுமை தாயகம் சார்பில் கையெழுத்து இயக்கம்

ஓசூர், டிச.11: சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, ஈழ தமிழர்களுக்கு நீதி வேண்டி பசுமை தாயகம் சார்பில் ஓசூரில் கையெழுத்து இயக்கம் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் சதீஸ் தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் முனிசேகர் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் கதிரவன் முதல் கையெழுத்திட்டு இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதுகுறித்து நிர்வாகிகள் கூறியதாவது:ஈழ தமிழர்கள் உரிமைக்காக பசுமை தாயகம், தொடர்ந்து ஐக்கிய நாடுகள் அவையில் குரல் கொடுத்து வருகிறது. வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40வது கூட்டத்தில், ஈழ தமிழர்களின் நீதிக்காக இந்தியா சார்பில் முக்கிய தீர்மானங்கள் கொண்டு வரக்கோரி பசுமை தாயகம் சார்பில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளோம்.

இலங்கை தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடும் குற்றங்களை விசாரிக்க  சிரியா, மியான்மர் போன்று, சர்வதேச பொறிமுறையை உருவாக்க வேண்டும். தீர்மானங்களின் மூலம் இலங்கை அரசு ஒப்புக்கொண்டபடி, நிலைமாற்ற நீதியை குறிப்பிட்ட கால வரம்பிற்குள் முழுமையாக நிறைவேற்ற உத்தரவிட வேண்டும். இலங்கையை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தக்கோரி ஐ.நா. பொது சபைக்கும், ஐநா பாதுகாப்பு சபைக்கும் பரிந்துரைக்க வேண்டும். உலகளாவிய நீதி அதிகாரத்தின் கீழ் இலங்கையின் குற்றவாளிகளை உலகநாடுகள் தண்டிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். நிகழ்ச்சியில் பசுமை தாயகம் மாவட்ட தலைவர் வாசுதேவன், மாவட்ட பொறுப்பாளர்கள் தங்கம் வெங்கடேஷ், பிரபு, வெங்கடேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

Tags : Eelam Tamils ,
× RELATED தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு...