×

இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு கலெக்டர் ஆபீசில் திடீர் தர்ணா போராட்டம்

தர்மபுரி, டிச.11:  தர்மபுரி மாவட்ட ஆதிதமிழர் பேரவை தலைவர் ராஜ்குமார் தலைமையில், 20க்கும் மேற்பட்டவர்கள் நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பிற்கு இருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி கலெக்டரிடம் மனு அளிக்க செய்தனர். அவர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டம் அதகபாடி அருகே ஆட்டுக்காரம்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்தில் 25 ஆண்டுகளுக்கு முன் இலவச வீட்டு மனை வழங்கப்பட்டது. ஆனால், இதுவரை எங்களுக்கு வீட்டுமனை பட்டாவை அதிகாரிகள் வழங்கவில்லை. இது தொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லை. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் சிலர் ஆக்கிரமிப்பு செய்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு எங்களுக்கு உரிய வீட்டு மனைக்கான இலவச பட்டாவை உடனே வழங்க வேண்டும். எங்கள் பகுதியில் ஆக்ரமிப்பு செய்பவர்களை அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

 உழவர் பேரியக்கம்: பந்தாரஅள்ளி ஊர் மக்கள் மற்றும் உழவர் பேரியக்கம் சார்பில் நேற்று கலெக்டர் மலர்விழியிடம் கொடுக்கப்பட்ட மனு விபரம்: கிருஷ்ணகிரி அணை வலதுபுற கால்வாய் மூலம் பாசனத்திற்காக திறக்கப்பட்ட உபரி நீர் காரிமங்கலத்திற்குட்பட்ட திண்டல் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்த ஏரி நிரம்ப சில நாட்கள் ஆகும். அதன்பின்னர் பந்தாரஅள்ளிக்குட்பட்ட கீழ்சவுளுப்பட்டி, மண்ணாடிப்ட்டி, வெள்ளான்குட்டை, நரிக்குட்டை, நடுக்கொட்டாய், முள்ளனூர், கரகப்பட்டி ஆகிய 7 ஏரிகளுக்கு நிரப்ப பாசன நீர் செல்ல வேண்டும். நடப்பாண்டில் கிருஷ்ணகிரி அணை 3 முறை நிரம்பியும் பந்தாரஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட ஏரிகளுக்கு நீர்வரத்து இல்லை. எனவே தற்போது வந்து கொண்டிருக்கும் நீர் நிறுத்தப்பட்டால் பந்தாரஅள்ளி ஊராட்சி ஏரிகளுக்கு நீர்வரத்து இருக்காது. எனவே கிருஷ்ணகிரி அணையின் வலதுபுற கால்வாயில் வெளியேற்றப்படும் தண்ணீரை நிறுத்தாமல் பந்தார அள்ளி ஊராட்சியில் உள்ள ஏரிகள் நிரம்பும் வரையில் பாசன நீரை வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : dharna struggle ,collector ,home ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...