×

மாநகராட்சி உத்தரவை மீறி காலி இடத்தில் ஆயில் கழிவு கொட்டிய ரயில்வே லாரிகளை மக்கள் சிறைபிடிப்பு: அதிகாரிகள் எச்சரிக்கை

திருவொற்றியூர்: மாநகராட்சி எச்சரிக்கையை மீறி திருவொற்றியூரில் உள்ள காலி இடத்தில் ஆயில் கழிவு கொட்டிய ரயில்வே லாரிகளை மக்கள் சிறைபிடித்தனர். திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட இந்திரா நகர் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. சுற்றுப்பகுதியில் உள்ள வீடுகளிலிருந்து சேகரிக்கப்படும் குப்பை லாரிகள் மூலம் கொண்டு வந்து, இங்கு கொட்டப்பட்டு மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பையாக தரம் பிரிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த குப்பை கிடங்கு அருகே செயல்படும் தனியார் நிறுவனங்கள், தங்களது குப்பை கழிவுகளை லாரியில் கொண்டு வந்து இந்த குப்பை கிடங்கில் கொட்டி தீவைத்து எரிக்கின்றனர். இதனால், அப்பகுதி முழுவதும் புகைமூட்ட மாகி சுற்றுவட்டாரத்தில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத் திணறல், சுவாசக் கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.  மேலும், பேருந்து மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு கண் எரிச்சல் ஏற்படுகிறது. எனவே, திருவொற்றியூரில் காலியாக உள்ள நிலங்களில் மாநகராட்சி அனுமதி இல்லாமல் குப்பைகளை கொட்டவோ,  எரிக்கவோ கூடாது, மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மண்டல உதவி ஆணையர் மோகன்  எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை இந்திரா நகர் அருகே ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் 2 லாரியில்  ஏராளமான இரும்பு மற்றும் ஆயில் கழிவுகள் கொண்டு வரப்பட்டு கொட்டப்பட்டது. இதுபற்றி அறிந்த இந்திரா காந்தி நகர் பகுதி மக்கள் அந்த லாரிகளை சிறைபிடித்து, அதில் இருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ஜெயராமன், திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
 
அந்த லாரி டிரைவரிடம் விசாரித்தபோது பெரம்பூர் லோகோ ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து கொண்டுவரப்பட்ட கழிவுகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து பொதுமக்களிடம் இருந்து லாரிகளை விடுவித்த அதிகாரிகள் மற்றும் போலீசார், இனிமேல் இதுபோன்ற குப்பை கழிவுகளை இங்கு கொட்டக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : area ,Galle ,
× RELATED வாட்டி வதைக்கும்...