×

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பாக அனைத்து துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பாகவும், அவற்றை சீரமைப்பது தொடர்பாகவும் அனைத்து துறைகளிடம் இருந்து அறிக்கை கேட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 250க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் உள்ளன. இதை தவிர்த்து அடையாறு, கூவம், பங்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட பெரிய நீர்நிலைகளும்  உள்ளன. இவற்றில் பெரிய நீர்நிலைகள் சென்னை நதிகள் சீரமைப்பு கழகத்தின் மூலம் சீரமைக்கப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து 210 நீர்நிலைகளை சீரமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது.

அதன்படி ஸ்மார்ட் சிட்டி நிறுவனத்தின் கீழ்  50 நீர்நிலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர்த்து 10 நீர்நிலைகள் மூலதன நிதி மற்றும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சீரமைக்கப்பட்டுள்ளன. மேலும் சி.ஐ.ஐ, ஈ.எப்.ஐ, கேர் எர்த் டிரஸ்ட், சிட்டி கனெக்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியின் மூலமாகவும், பிற அரசு சாரா அமைப்புகளின் நிதியிலிருந்தும், சுமார் 30 நீர்நிலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள நீர்நிலைகளை சீரமைக்கும் பணி தொடர்பாக தமிழ்நாடு நீர் மூலதன கழகம் மூலம் விரிவான திட்ட அறிக்கை தயார் செயப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை அகற்றுவது தொடர்பாகவும், அவற்றை சீரமைப்பது தொடர்பாகவும் அனைத்து துறைகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று ரிப்பன் மாளிகையில் நடந்தது. இதில் மாநகராட்சி, பொதுப்பணித்துறை, மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் நீர்நிலைகளை சீரமைக்க அனைத்து துறைகளும் முழு ஒத்துழைப்பு வழங்க ேவண்டும் என்று மாநகராட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பாக தங்களிடம் உள்ள தகவல்களை அறிக்கையாக சென்னை மாநகராட்சியிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...