×

நம்ம சென்னை செயலியை 47 ஆயிரம் பேர் மட்டுமே பதிவிறக்கம் செய்துள்ளனர்: 16 ஆயிரம் புகார்கள் பதிவு

சென்னை: பொதுமக்கள் புகார்களை பதிவு செய்ய சென்னை மாநகராட்சியால்  தொடங்கப்பட்ட நம்ம சென்னை செயலியை இதுவரை 47 ஆயிரம் பேர் மட்டுமே  பதிவிறக்கம் செய்துள்ளனர். இதில், 16 ஆயிரம் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.   சென்னை மாநகராட்சியில் பொதுமக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்க கடந்த ஜனவரி மாதம் ‘நம்ம சென்னை’ என்ற செயலி தொடங்கப்பட்டது. ஸ்மார்ட்டி சிட்டி நிதியின் கீழ் தொடங்கப்பட்ட இந்த செயலியில் பொதுமக்கள் தெருவிளக்கு பராமரிப்பு, குப்பை அகற்றுதல், நாய் தொல்லை, சாலைப்பணிகள் பராமரிப்பு, மழைநீர் வடிகால் பராமரிப்பு உள்ளிட்டவைகள் தொடர்பான புகார் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.  

இந்த புகார்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உடனுக்குடன் அனுப்பப்பட்டு, அதன்மீது மேற்கொண்ட நடவடிக்கை விவரங்களை மனுதாரருக்கு கைபேசி செயலி மூலமாகவே உடனுக்குடன் தெரிவிக்கப்படும். இந்த செயலியை இதுவரை 47,478 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ‘நம்ம சென்னை’ செயலியானது தொடக்கத்தில் புகார் பதிவு செய்வதற்காக மட்டுமே தொடங்கப்பட்டது. இதன் பிறகு பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், சொத்து வரி, தொழில் வரி, தன்னார்வலர்கள் பதிவு உள்ளிட்ட வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. இதைத்தவிர சென்னை மாநகராட்சியின் செய்திக் குறிப்புகளும் இதில் வெளியிடப்படுகின்றன. ஆனால் இந்த செயலி பயன்டுத்த மக்கள் ஆர்வம் காட்டவில்லை.

செயலி தொடங்கி 11 மாதங்கள் ஆகியும் இதுவரை 47 ஆயிரத்து 478 பேர் மட்டுமே இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். ேநற்று வரை இந்த செயலி மூலம் 16 ஆயிரத்து 744 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 16 ஆயிரத்து 495 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.  
சென்னை மாநகராட்சியில் மொத்தம் 12 லட்சம் பேர் சொத்துவரி செலுத்துகின்றனர். இதன்படி பார்த்தால் 0.5 சதவீத மக்கள் மட்டும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து  பயன்படுத்தி வருகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

Tags : Chennai ,
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...