×

குடோனாக மாறி வரும் பல்லாவரம் மேம்பாலம்: நெடுஞ்சாலைத்துறை ‘கப்சிப்’

பல்லாவரம்: பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையையும், துரைப்பாக்கம் ராஜிவ்காந்தி சாலையையும் இணைக்கும் வகையில், ரேடியல் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரேடியல் சாலை பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் இணையும் பகுதியில் பல லட்சம் மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தின் அடிப்பகுதியில் உள்ள காலி இடத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில் இருசக்கர வாகன பார்க்கிங் அமைக்க வேண்டும். இல்லையெனில் பூங்கா அமைக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், தனியார் சிலர் இந்த இடத்தை ஆக்கிரமித்து பழைய இரும்பு பொருட்கள், பிளாஸ்டிக் டிரம்கள், மரப்பொருட்களை வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இங்கு பொருட்களை வாங்க வரும் வாகனங்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதை தடுக்க வேண்டிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளோ கண்டும் காணாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘மேம்பாலத்தின் அடிப்பகுதியில் உள்ள காலி இடம் ஆக்கிரமிப்பு குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதுபோன்ற நேரங்களில் மட்டும்  வெறுமனே கண் துடைப்பிற்காக, நடவடிக்கை எடுப்பது போல் அதிகாரிகள் நடிக்கின்றனர்.

ஆனால், மீண்டும் மறுநாளே பாலத்தின் அடியில் கடை வைக்கப்படுகிறது. அத்துடன் சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்து தங்களது வாகனங்களில் பொருள்களை ஏற்றி, இறக்கும் பணியில் ஈடுபடுவதால் அவ்வழியே செல்லும் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை தடுக்கும் வகையில் மேம்பாலத்தை சுற்றிலும் தடுப்புகள் அமைத்து, பூங்கா அமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : Pallavaram ,
× RELATED பல்லாவரம் அருகே மதுபோதை தகராறு:...