×

திருமுல்லைவாயல் அந்தோணி நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

ஆவடி: ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல் அந்தோணி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. ஆவடி நகராட்சி 13வது வார்டுக்கு உட்பட்ட திருமுல்லைவாயல் பகுதியில் அந்தோணி நகர் உள்ளது. இங்குள்ள 13 தெருக்களில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. சுமார் 1200க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள பிரதான சாலையில் 15 வீடுகளை கொண்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.

 இந்த அடுக்குமாடி குடியிருப்பின் கழிவுநீர் தொட்டி நிரம்பும்போது அதை முறையாக லாரி மூலம் அகற்றுவதில்லை. இதனால், கடந்த 2 ஆண்டாக கழிவுநீர் வெளியேறி  தெருவில் ஓடுகிறது. இதனால் மக்கள் தெருவில் நடமாட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் கூறுகையில், ‘‘தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள செப்டிக் டேங்கில் இருந்து கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கழிவு நீர் வெளியேறி சாலையில் வழிந்தோடி காலி இடங்களில் குளம்போல் தேங்கி நிற்கிறது. கடும் துர்நாற்றம் வீசுவதால் பாதசாரிகள் இவ்வழியாக நடந்து செல்ல முடியவில்லை.

இந்த கழிவு நீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாவதால், குடியிருப்பு வாசிகள் டெங்கு, மலேரியா மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பலமுறை நகராட்சி அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் புகார் அனுப்பியும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். எனவே, இனிமேலாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடுக்குமாடியில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : apartment building ,
× RELATED லால்குடி அடுத்த தாளக்குடியில்...