×

இந்தியாவில் பிறந்து ஆஸ்திரேலியா சென்ற இலங்கை அகதியை நாடு கடத்த பின்பற்றிய நடைமுறை என்ன? வெளிநாட்டினர் பதிவு அதிகாரிக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: இந்தியாவில் பிறந்து ஆஸ்திரேலியா சென்ற இலங்கை வாலிபரை எந்த அடிப்படையில் இலங்கைக்கு மீண்டும் நாடு கடத்தினீர்கள், என்ன நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது என்று மண்டல வெளிநாட்டினர் பதிவு அதிகாரிக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த 1987ல் இலங்கையில் நடந்த போரில் இந்தியாவுக்கு அகதியாக வந்தவர் சுந்தர் லிங்கம். இவரது மகன் ஆனந்த். கடந்த 1992ல் கேரளாவில் பிறந்த ஆனந்த், பின்னர் சென்னை செங்குன்றத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்தார். அதன் பிறகு கடந்த 2013ல் ஆஸ்திரேலியாவுக்கு சென்றார்.

கடந்த அக்டோபர் 27ம் தேதி அவர் ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியா திரும்பியபோது சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் அவரை பிடித்து விசாரித்தனர். பிறகு இலங்கைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், மகனை ஆஜர்படுத்தக்கோரி சந்தர்லிங்கம் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மண்டல வெளிநாட்டினர் பதிவு அலுவலர் சார்பில் ஆஜரான வக்கீல் வாதிடும்போது, ஆனந்த் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகில் சென்றுள்ளார். அங்கு அவருக்கு குடியுரிமை வழங்க ஆஸ்திரேலிய அரசு மறுத்துவிட்டது.

ஆனால், மெல்போர்னில் உள்ள இந்திய தூதரகத்தில் போலி ஆவணங்களைக் காட்டி ஆனந்த் சான்றிதழ் பெற்றுள்ளார். எனவேதான் அவரை இந்திய அதிகாரிகள் இலங்கைக்கு அனுப்பி வைத்தனர் என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியாவுக்கு வந்த ஆனந்த் எந்த அடிப்படையில், எந்த நடைமுறையின்கீழ் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்?.

இந்தியாவில் பிறந்து இங்கு படித்தவரை ஏன் இலங்கைக்கு அனுப்ப வேண்டும், ஆஸ்திரேலியாவிலிருந்து வந்தவரை ஆஸ்திரேலியாவுக்கு ஏன் அனுப்பவில்லை, ஆஸ்திரேலியாவிலும், இந்தியாவிலும் குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் ஆனந்தை இந்தியாவில் விசாரிக்காமல் ஏன் இலங்கைக்கு அனுப்பினீர்கள், இந்த கேள்விகளுக்கு வரும் 20ம் தேதி மண்டல வெளிநாட்டினர் பதிவு அதிகாரி பதில் தரவேண்டும் என்று உத்தரவிட்டார்.

Tags : refugees ,deportation ,Sri Lankan ,Australia ,India ,registration officer ,foreigners ,court ,
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை படை தாக்குதல்!