×

மலேசியாவில் இருந்து இறகு பந்துகளில் கடத்தி வந்த 13.5 லட்சம் தங்கம் பறிமுதல்: வாலிபர் கைது

சென்னை: மலேசியாவில் இருந்து இறகு பந்துகளில் மறைத்து கடத்தி வந்த 13.5 லட்சம் மதிப்புள்ள தங்க கம்பிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து, வாலிபரை கைது செய்தனர். அதேபோல் மலேசியாவுக்கு கடந்த முயன்ற 22.5 லட்சம் வெளிநாட்டு கரன்சியை பறிமுதல் செய்த அதிகாரிகள், இததொடர்பாக 4 பேரையும் கைது செய்தனர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பார்ட்டிக் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை 8.30 மணிக்கு சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை, சுங்க அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, சென்னையை சேர்ந்த சலீம் முகமது (26) சுற்றுலா பயணியாக மலேசியா சென்று திரும்பினார். அவரது உடமைகளை சோதனை செய்தபோது எதுவும் இல்லை. சோதனை முடிந்ததும் அவர், பரபரப்புடன் புறப்பட்டார். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள், அவரை நிறுத்தி மீண்டும் சோதனை செய்தனர். அப்போது, அவரிடம் சில பார்சல்கள் இருந்தன. அதை பிரித்து பார்த்தபோது, ஷெட்யூல் கார்க் விளையாடும் 24 இறகு பந்துகள் இருந்தன. அதனை முழுவதுமாக அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், தங்க கம்பிகளை சுற்றி, மறைத்து வைத்திருப்பது தெரிந்தது. மொத்தம் 450 கிராம் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இதன் சர்வதேச மதிப்பு 13.5 லட்சம். இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், சலீம் முகமதுவை கைது செய்தனர். இதைதொடர்ந்து சென்னையில் இருந்து கோலாலம்பூர் செல்லும் ஏர் ஏசியா விமானம் நேற்று காலை 10.30 மணிக்கு புறப்பட தயாரானது. அதில் செல்ல வந்த பயணிகளை, அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, சென்னையை சேர்ந்த அப்துல் அமீன் (48), சிக்கந்தர் (40), சாவுத் அலி (28), ராவுத்தர் (32) ஆகியோர் குழுவாக மலேசியா செல்ல வந்தனர்.

அவர்கள் மீது சந்தேகமடைந்த போலீசார், உடமைகளை தீவிரமாக சோதனை செய்தனர். ஆனால், அதில் எதுவும் இல்லை. பின்னர் அவர்களை, தனி அறைக்கு அழைத்து சென்று, உடல் முழுவதும் சோதனை செய்தபோது, உள்ளாடைகளில் வெளிநாட்டு கரன்சிகளை கட்டுக்கட்டாக மறைத்து வைத்திருந்ததை கண்டு பிடித்தனர். அதன் இந்திய மதிப்பு 22.5 லட்சம். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், 4 பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Malaysia ,
× RELATED வெளிநாடு தப்ப முயன்ற குற்றவாளி சென்னையில் கைது