×

நெரிசலை தவிர்க்க அதிக பஸ்கள் வேண்டும்

ராமநாதபுரம், டிச.11: பார்த்திபனூருக்கு திருச்சுழி, நரிக்குடி வழியாக காலை, மாலை நேரத்தில் கல்லூரி நாட்களில் அதிக பஸ்களை இயக்க வேண்டும் என மாணவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். ராமநாதபுரம் மாவட்ட எல்கை பகுதியான பார்த்திபனூருக்கு அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி வழியாக பஸ் போக்குவரத்து நடந்து வருகிறது. மாணவர்கள், அரசு அதிகாரிகள், பல்வேறு தேவைகளுக்காக வரும் பொதுமக்கள் ஆகியவர்களால் பஸ்களில் எப்போதும் கூட்ட நெரிசல் மிகுதியாக உள்ளது. அதிக கூட்டம் காரணமாக காலை, மாலை நேரங்களில் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியவாறு ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். ஒரு சிலர் பஸ்ஸின் கூரைகள் மீதும், பின்புறம் கம்பில் தொங்கியவாறும் பயணிக்கின்றனர். இதனால் பல பஸ்கள் எடை தாங்காமல் சாய்ந்து விழும் நிலையில் செல்கின்றன. இதனால் விபத்து ஏற்பட்டு உயிர்ப்பலி நேரிடும் அபாயம் உள்ளது.

இதுதவிர நகர்புறத்தில் நடக்கும் திருமணம், விழாக்களுக்கு கிராம பகுதிகளிலிருந்து வர கிராம மக்கள் பஸ்களையே அதிகம் நம்ப வேண்டியுள்ளது. இதனால் பஸ் உரிமையாளர்கள் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிய பிறகு அதிவேகமாகவும் சாலைகளில் செல்வதால் தொடர்ந்து விபத்து அபாயம் நிலவி வருகிறது. அதிக வேகத்தை கட்டுப்படுத்த ஹைவே போலீசார், டிராபிக் போலீசார் சாலையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இருப்பினும் விபத்துக்கள் இன்னும் குறையாமல் உயிர்பலி அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி வேலை நேரங்களில் பார்திபனூர் பகுதியில் கூடுதல் அரசு பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுநல அமைப்புகள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து மாணவர் குமார் கூறுகையில், பார்த்திபனூர், ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் பாலிடெக்னிக் கல்லூரி அருகே அரசு பஸ்கள் நிற்பதில்லை. இதனால் பஸ் ஸ்டாண்டிலிருந்து 3 கி.மீ தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. இதேபோல் திருச்சுழி, நரிக்குடி வழியாக காலை, மாலை நேரத்தில் கல்லூரி நாட்களில் அதிக பஸ்கள் இயக்கப்படாததால் பஸ்ஸின் மேற்கூரையிலும், படிக்கட்டுகளிலும் நிற்க வேண்டியுள்ளது. கல்லூரி நாட்களில் அரசு டவுன் பஸ்களை அதிகப்படுத்தினால் இதுபோன்ற பிரச்னை வராது என்று கூறினார்.

Tags :
× RELATED உலக புத்தக தின விழா