×

விஏஓக்கள் போராட்டத்தால் 5 ஆயிரம் மனுக்கள் தேக்கம்

பரமக்குடி, டிச.11: ராமநாதபுரம் மாவட்டத்தில் விஏஓக்களின் தொடர் போராட்டத்தால் சான்றிதழ் வழங்கும் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 5 ஆயிரம் மனுக்கள் தேக்கமடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விஏஓ.க்களுக்கான கல்வித் தகுதியை உயர்த்துவது, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்துவது, ஆன்லைன் பணிகளுக்கு ஊதியம் வழங்குவது, மாவட்டத்திற்குள் மட்டும் பணி மாறுதல் கொடுக்கவேண்டும் உள்ளிட்ட 21 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த நவ.28 முதல் பணிகளை புறக்கணித்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று பணிகளை புறக்கணித்து வருவதால் ஆன்லைன் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வருமானம், இருப்பிடம், சாதி, விதவை உள்ளிட்ட 22 வகையான சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் ஸ்தம்பித்து விட்டது. இந்த போராட்டத்தால் பரமக்குடி, முதுகுளத்தூர், கடலாடி. கமுதி, ராமநாதபுரம், திருவாடானை உள்ளிட்ட தாலுகா அலுவலகங்களில் 5 ஆயிரம் மனுக்கள் தேக்கம் அடைந்துள்ளது. பட்டா மாறுதல் பணிகள் முடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் சான்றிதழ் பெற முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். விஏஓ சங்க மண்டல பொறுப்பாளர் சதீஸ் கூறுகையில், “எங்கள் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கும் வரை போராட்டம் தொடரும். மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக போராட்டத்திற்கு மத்தியிலும் பயிர்‘காப்பீடு, கஜா புயல் பாதிப்பு உள்ளிட்ட பணிகளை கணக்கெடுத்து வருகிறோம்’’ என்றார்.

Tags : petitions ,protest ,VAOs ,
× RELATED 5 ராஜ்குமார், 3 ராமச்சந்திரன் கோவையில் போட்டி