×

குண்டும் குழியுமாக காணப்படுகிறது உருக்குலைந்த உறங்கான்பட்டி சாலை

சிவகங்கை, டிச.11: சிவகங்கை அருகே கள்ளராதினிப்பட்டியில் இருந்து உறங்கான்பட்டி செல்லும் சாலை குண்டும் குழியுமாய் உள்ளது. இதனை உடனே சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர். சிவகங்கை அருகே கள்ளராதினிப்பட்டியில் இருந்து உறங்கான்பட்டி செல்லும் தார்ச்சாலை சுமார் 3 கி.மீ தூரம் கொண்டது. இதில் 2 கி.மீ மதுரை மாவட்ட எல்கைக்குள் உள்ளது. எஞ்சியுள்ள ஒரு கி.மீ சாலை சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்டது. இச்சாலையை கண்மாய்பட்டி, திருமலை, கள்ளராதினிப்பட்டி, அழகமாநகரி, உறங்கான்பட்டி உள்ளிட்ட ஏராளமான கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலையில் மேலூரில் இருந்து கள்ளராதினிப்பட்டி வழி கீழப்பூங்குடி வரை ஒரு நாளைக்கு இரண்டு முறை பஸ் போக்குவரத்து உள்ளது. உறங்கான்பட்டி, அழகமாநகரி, மேலூர் ஆகிய ஊர்களுக்கு இப்பகுதி கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களும் இந்த சாலை வழியே தான் செல்ல வேண்டும்.

இந்த சாலை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக முற்றிலும் சிதைந்து குண்டும், குழியுமாய் போக்குவரத்திற்கு பயனற்ற வகையில் உள்ளது. இதனால் மாணவர்கள், கிராமத்தினர் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். கிராமத்தினர் கூறுகையில், இரண்டு மாவட்ட எல்லைக்குள் இந்த சாலை உள்ளது. மதுரை மாவட்ட எல்கையில் இருந்து சாலை நல்ல நிலையில் உள்ளது. சிவகங்கை மாவட்ட எல்கையில் உள்ள சாலை கண்டுகொள்ளப்படாமல் உள்ளது. பஸ் போக்குவரத்து உள்ள பிரதான சாலை ஆண்டுக்கணக்கில் புதிய சாலை போடப்படாமல் மண் சாலைபோல் காட்சியளிக்கிறது. இதில் வாகனங்கள் செல்லும்போது அதிகப்படியான தூசி பறக்கிறது. எனவே புதிய சாலை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : road ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...