×

தேவிபட்டினம் நெடுஞ்சாலையில் குப்பைகளால் எப்போதும் துர்நாற்றம்

ராமநாதபுரம், டிச.11: ராமநாதபுரம், தேவிபட்டினம் நெடுஞ்சாலையில் கேணிக்கரை அருகே சேரும் குப்பைகள் அனைத்தும் நெடுஞ்சாலை ஓரத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. குப்பைகளில் இருந்து வரும் துர்நாற்றத்தால் சாலையில் செல்லும் வாகன ஓட்டுநர்கள், சிரமம் அடைந்து வருகின்றனர். குப்பைகள் குவிக்கப்படும் இடத்திற்கு அருகில் குடியிருப்பு வீடுகள் உள்ளன. பல நேரங்களில் அங்குள்ள குப்பைகள் அள்ளப்படாமல் எரிக்கப்படுவதால் உண்டாகும் புகையால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதுதவிர அதன் வழியாகத்தான் மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். நகராட்சி நிர்வாகத்தினர் நெடுஞ்சாலை ஓரத்தில் குப்பைகளை கொட்டி எரிக்காமல் அதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டுமென்று பொதுமக்கள் பலர் வலியுறுத்தி உள்ளனர்.

அப்பகுதியை சேர்ந்த சங்கர் கூறுகையில், சாலையோரத்தில் குப்பைகள் எரிக்கப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்தினருக்கு பலமுறை தெரிவித்தும் அவர்கள் நடவடிக்கை எடுப்பது கிடையாது. வீடுகளில் சேரும் குப்பைகள், பிளாஸ்டிக் குப்பைகள் போன்றவற்றை எரித்து வந்த நிலையில் தற்போது பெரிய மரங்களையும் சாலையோரத்தில் வைத்து எரிக்கின்றனர். அசம்பாவிதம் ஏற்படும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Tags : Devi Pattinam ,highway ,
× RELATED கலவை- வாழைப்பந்தல் நெடுஞ்சாலையில் மரங்களை மர்ம நபர்கள் தீ வைத்து எரிப்பு