×

சம்பள முரண்பாட்டால் பணியாளர்கள் வேலை நிறுத்தம்

சாயல்குடி, டிச.11: கமுதி அருகே அச்சங்குளம் அரசு நூற்பாலையில் சம்பள முரண்பாட்டால் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், நூல் உற்பத்தி முடங்கியுள்ளது. கமுதி அருகே அபிராமம் அச்சங்குளத்தில் அரசு நூற்பாலை இயங்கி வருகிறது. இதன் மூலம் அரசு கைத்தறி நிறுவனம், வணிக ரீதியான நூல் உற்பத்தி செய்து வந்தது. நஷ்டத்தில் இயங்கியதால் தொழிற்சாலை மூடப்பட்டது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். மீண்டும் 2015ல் புதிய தொழில் நுட்பத்துடன் இறக்குமதி செய்யப்பட்ட புதிய இயந்திரங்களுடன், தொழிற்சாலை மேம்படுத்தப்பட்டு திறக்கப்பட்டது. ரூ.28 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட தொழிற்சாலையில் 17 தொழில் நுட்ப பணியாளர்கள், 110க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் தொழில் நுட்ப பணியாளருக்கு சம்பளமாக நாள் ஒன்றிற்கு ரூ.375ம், தொழிலாளர்களுக்கு ரூ.325ம் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் வழங்கப்படும் சம்பளத்தில் சிறு தொகை வித்தியாசத்தில் முரண்பாடு ஏற்பட்டது. இதனால் கூடுதல் பணி பார்த்து, பணிசுமைக்கு ஆளாகும் தொழில் நுட்ப பணியாளர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும் என பணியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த அக்டோபர், நவம்பர் மாதம் அரசுடன் நடத்திய இரண்டு கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால் சம்பள உயர்வு கேட்டு தொழில் நுட்ப பணியாளர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு, ஆலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நாள் ஒன்றிற்கு 3 ஷிப்ட் பார்க்கும் பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், தினமும் சுமார் 5000 கிலோ நூல் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தொழிற்சாலை முடங்கியுள்ளது. தை பொங்கலுக்காக ஏழை மக்களுக்கு அரசு வழங்கும் இலவச வேட்டி, சேலை உற்பத்தி பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே அரசு பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணவேண்டும் என பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Strike strike ,
× RELATED லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவன...