×

அரசு தலைமை மருத்துவமனையில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை நோயாளிகள் குற்றச்சாட்டு

ராமநாதபுரம், டிச.11: ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 10க்கும் மேற்பட்ட சிகிச்சை பிரிவுகள் உள்ளன. மகப்பேறு. குழந்தைகள் நலம், அறுவை சிகிச்சை, சித்த மருத்துவம், காச நோய், மனநலம், கண் சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை என சாதாரண காய்ச்சல் முதல் டெங்கு காய்ச்சல் வரை ஏராளமான பிரிவுகளில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் நோயாளிகளுக்கு தொடர் சிகிச்சை அளிப்பதற்காக 700க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள் நோயாளிகள் பிரிவுகளும் உள்ளன. அனைத்திலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரசவம் மற்றும் காய்ச்சல், அறுவை சிகிச்சை என அட்மிட் ஆகும் நோயாளிகள் ஒரு வாரமாவது மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற வேண்டும். நோயாளிகளுடன் ஒருவர் தங்கி கொள்ள மருத்துவமனை அனுமதியளித்துள்ளது. சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மூன்று வேளைகளில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. உதவியாளர்கள் வெளியிலிருந்து உணவுகளை வாங்கி வந்து சாப்பிடுகின்றனர். இதுபோல தினமும் நோயாளி மற்றும் உதவியாளர் என 1000 பேர் மருத்துவமனையில் தங்கியுள்ளனர். இவர்களுக்கு குடிப்பதற்காக குடிநீர் தனியார் தொண்டு நிறுவனம் வழங்கிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தின் மூலமாக குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

தினமும் உள்நோயாளிகள் வாட்டர் பில்டர் பிளாண்ட்டில் இருந்து அமைக்கப்பட்டுள்ள குழாய்களில் குடிநீரை எடுத்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக முறையாக பராமரிப்பு இல்லாமல் வாட்டர் பிளாண்ட் பழுதாகி விட்டது. இதனால் நோயாளிகள் குடிக்க குடிநீர் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். பகல் நேரங்களில் மருத்துவமனைக்கு வெளியே உள்ள கடைகளில் விலைக்கு வாங்கி குடித்து வருகின்றனர். பிரசவ வார்டிலிருந்து வெளியே கடைக்கு சென்று வர ஒரு கி.மீ. தூரம் உள்ளது என கூறுகின்றனர். இரவு நேரங்களில் கடைகள் ஏதும் இல்லாததால், அதுவும் கிடைக்காமல் குடிநீருக்காக அவதிப்படுகின்றனர். பிரசவத்திற்காக வந்துள்ள பெண் கூறுகையில், குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் தினமும் காலை, பகல், இரவு என மூன்று வேளையும் நீண்டதூரம் நடந்து சென்று கடையில் வாங்க வேண்டியுள்ளது. ஒரு முறை போய் வந்தவுடன் சோர்வு ஏற்பட்டு கால் உளைச்சல் ஏற்படுகிறது. குடிநீருக்காக மட்டும் தினமும் ரூ.75 செலவாகிறது என்றார். மாவட்ட தலைமை மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருவதாக அதிகாரிகள் சொல்லி வருகின்றனர். ஆனாலெ் நோயாளிகளுக்கு குடிக்க தண்ணீர் இல்லாதது, வேதனை அளிக்க கூடியது என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags : Government Chief ,hospital ,
× RELATED தேர்தல் பிரச்சாரத்தின்போது திடீர்...