ஏற்கனவே 2 கடைகள் இருக்கு வாடிப்பட்டியில் இன்னொரு டாஸ்மாக்கா?

வாடிப்பட்டி, டிச.11: வாடிப்பட்டி நகருக்குள் ஏற்கனவே இரண்டு மதுபானக்கடைகள் இருக்கும் நிலையில், கூடுதலாக ஒரு ஒரு மதுபானக்கடை திறக்கும் டாஸ்மாக் நிர்வாகத்தின் முடிவுக்கு அப்பகுதி பொதுமக்கள், வியாபரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் மதுரையிலிருந்து வாடிப்பட்டி நகருக்குள் நுழையும் இடத்தில் சுடுகாடு அருகே ஏற்கனவே மதுபானக் கடை இருந்தது. பல மாதங்கள் முன் நீதிமன்ற உத்தரவினை அடுத்து அக்கடை மூடப்பட்டது. இந்நிலையில் சில மாதங்கள் மூடப்பட்ட அந்த மதுபானக் கடை மீண்டும் அதே இடத்தில் திறக்கப்பட்டுள்ளது. மேலும் வாடிப்பட்டி நீதிமன்றம் அருகில் மேலும் ஒரு மதுக்கடையும் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் வாடிப்பட்டியிலிருந்து குட்லாடம்பட்டி செல்லும் சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு போதிய வருமானம் இல்லை என கருதும் டாஸ்மாக் நிர்வாகம் அந்த கடையினை குடியிருப்பு பகுதிகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ள வாடிப்பட்டி பேரூராட்சி நகர் பகுதிக்குள்ளேயே இடமாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளது. அத்துடன் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு ஏற்கனவே எதிர்ப்பு எழுந்த நிலையில், அத்திட்டத்தை கைவிட்ட டாஸ்மாக் நிர்வாகம், மீண்டும் கடையினை திறப்பதற்கான முழுமுயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வக்கீல் சங்கத்தினர், வர்த்தகர்கள் சங்கத்தினர், லயன்ஸ்கிளப் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே, வாடிப்பட்டி நகருக்குள் கூடுதலாக மதுக்கடை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கக் கூடாது என கோரிக்கை விடுத்துள்ள அவர்கள், எதிர்ப்பையும் மீறி மதுக்கடை திறந்தால், தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் எச்சரித்துள்ளனர்.

Related Stories: