×

அதிகாரிகள் எச்சரிக்கை வேடசந்தூர் ஆத்துமேட்டில் ஆவணங்களை அழித்து அரசு இடம் அபகரிப்பு?

வேடசந்தூர், டிச. 11: வேடசந்தூர் ஆத்துமேட்டில் ஆவணங்களை அழித்து அரசு இடம் அபகரிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. வேடசந்தூர் ஆத்துமேட்டில் சங்கு ஊதும் இடம் செயல்பட்டு வந்தது. பேரூராட்சி நிர்வாகம் இந்த இடத்திற்கு வரி வசூல் செய்து வந்ததுடன், இங்கு வேலை பார்த்தவர்களுக்கு சம்பளமும் வழங்கி வந்துள்ளனர். 1900ம் ஆண்டு வரை செயல்பட்டு வந்த சங்கு ஊதும் இடம் பல ஆண்டுகள் காலி இடமாகவே இருந்தது. இந்நிலையில் அதிகாரிகள் இந்த இடத்திற்கான ஆவணங்களை அழித்து, உள்ளூர் அதிமுக பிரமுகரின் உறவினர் பெயருக்கு பட்டா வழங்கியுள்ளதாக தெரிகிறது. தற்போது இங்கு கட்டுமான பணி தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிகளும் அரசு அதிகாரிகள் இல்லாத விடுமுறை நாட்களில் மேற்கொள்ள வேண்டுமென வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சனி, ஞாயிறு மட்டும் கட்டுமான பணியை மேற்கொண்டு அலுவலகங்கள் செயல்படும் நாட்களில் எந்த பணியும் செய்வதில்லையாம். மேலும் இந்த கட்டுமான பணிக்கு பேரூராட்சியில் பிளான் அப்ரூவல் அனுமதி இதுவரை இல்லை. ஆனால் இதற்கும் அந்த அதிமுக பிரமுகர் நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர், கோட்டாட்சியர், வட்டாட்சியரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. மேலும் கடந்த டிச.3ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதற்கிடையே இந்த விடத்தின் ஆவணங்களை அழித்த அதிகாரிகள் மீதும், தற்போது ஆவணங்கள் வழங்கிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி கடந்த 28.6.2018 திண்டுக்கல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆனால் நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருக்கும் போது கட்டிடம் கட்டுவது எப்படி என சமூகஆர்வலர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

Tags :
× RELATED வெயிலின் தாக்கத்தால் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்