பள்ளங்களாக காட்சியளிக்கும் பள்ளங்கி சாலை

கொடைக்கானல், டிச. 11: கொடைக்கானல் பள்ளங்கி சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகனஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கொடைக்கானலில் இருந்து 10 கிமீ தூரத்தில் உள்ளது பள்ளங்கி கிராமம். இங்கு 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவ்வூருக்கு அட்டுவம்பட்டி பிரிவிலிருந்து சுமார் 5 கிமீ செல்லும் சாலை பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலை வழியாக அட்டுவம்பட்டி, வாழைகாட்டுஓடை, மாட்டுப்பட்டி, பள்ளங்கி, கோம்பை பகுதி மக்கள் சென்று வருகின்றனர். மேலும் கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகம் இங்குதான் உள்ளது. இதனால் மாணவிகளும் சென்று வர இச்சாலையைதான் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் நாள்தோறும் பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள், மாணவிகள் என அனைத்து தரப்பினரும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக சாலையின் மெகாசைஸ் பள்ளங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரால் அடிக்கடி விபத்து நடந்து வருகிறது. சாலையை சீரமைக்க கோரி இப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும், இல்லாவிட்டால் போராட்டம் செய்ய போவதாக இப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: