போராட்டம் ஏன்? ‘மக்களை தேடி’ விஏஓக்கள் விளக்கம்

திண்டுக்கல், டிச. 11: விஏஓக்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை துவக்கி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு சென்று கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் மூலம் விளக்கம் அளித்தனர். தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் தமிழகத்தில் பணிபுரியும் விஏஓக்களின் அவலநிலையை பொதுமக்களுக்கு எடுத்து காட்டி நியாயம் கோரும் விதமாக  21 கோரிக்கைகளை வலியுறுத்தி ‘மக்களை தேடி’ என்ற காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை நேற்று முதல் துவங்கியுள்ளனர். இது குறித்து மாவட்டத் தலைவர் ராஜரத்தினம், பொருளாளர் முருகன், செயலாளர் லோகநாதன் ஆகியோர் கூறியதாவது: 90களில் தொழில்நுட்பப் பணி என்று வரையறுக்கப்பட்டிருந்தது. ஆனால் காரணமின்றி 2009ல் விலக்கிக் கொள்ளப்பட்டது. தற்போது 50 சதவீதத்திற்கும் மேல் ஆன்லைன் மூலம் சான்று பெறும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. எனவே எங்கள் பணியை தொழில்நுட்ப வரையறைக்குள் கொண்டு வர வேண்டும். ஒரு விஏஓ ஒன்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை கூடுதல் பணியிடமாக கவனித்து வருகின்றனர். எனவே காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். பட்டா மாறுதல் செய்த பின்பு அதில் ஏற்படும் தவறுகள் அல்லது நீதிமன்றங்களில் சாட்சியம் அளிப்பது விஏஓக்கள்.

ஆனால் பட்டா மாறுதல்களில் எவ்வித சம்பந்தமும் விஏஓக்களுக்கு இல்லை என்பது என்ன ஒரு நீதி? இதனை விஏஓக்கள் ஒப்புதல் பெற்ற பின்னே பட்டாமாறுதல் செய்ய வேண்டும். 2013ம் ஆண்டு முதல் பொதுமக்கள் அனைவரும் இணையதளத்தில் சான்றுகள் பெற்று வருகின்றனர். இவையனைத்தும் இதுநாள் வரை தங்களது சொந்த செலவில் செய்து வருகின்றனர். எனவே விஏஓ அலுவலகத்தில் கம்ப்யூட்டர், இணைதள வசதி செய்து தர வேண்டும். கிராம நிர்வாக அலுவலகங்கள் சேதமடைந்தும், கழிப்பறை வசதி இல்லாமலும் உள்ளன. இதனால் பெண் அலுவலர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும், தொடர் போராட்டங்களை நடத்தியும் அரசு கண்டுகொள்ளவில்லை. எனவே காலவரையற்ற போராட்டத்தைத் துவக்கி உள்ளோம்’’ என்றனர்.மாவட்டத்தில் 235 பேர் இதில் கலந்து கொண்டனர். ஏன் போராடுகிறோம் என்று விஏஓ.க்கள் பேருந்துநிலையம், பூமார்க்கெட், பழநி ரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் துண்டு பிரசுரங்கள் வழங்கி பொதுமக்களுக்கு விளக்கி கூறினர். இவர்களின் போராட்டத்தில் மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் தேங்கி உள்ளன. இன்று அனைத்து தாலுகா அலுவலகங்களில் அமைதியாக அமர்ந்து போராடவும் அப்போது அங்கு வரும் பொதுமக்களிடமும் ஏன் போராடுகிறோம் என்று விளக்கி கூறவும் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: