×

விபத்தில் உயிரிழந்த மக்களுக்கு நிவாரண உதவி

உடுமலை,டிச.11: உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று வால்பாறை அருகே கடந்த அக்டேபர் மாதம் நடந்த சாலைவிபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல் அமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் நிவாரண உதவி தொகை வழங்கப்பட்டது. கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த காடம்பாறை பவர்ஹவுஸ் பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 10ம் தேதி  நடந்த சாலைவிபத்தில் திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குருமலை,மாவடப்பு,குழிப்பட்டி உள்ளிட்ட செட்டில்மெண்ட் பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் 18 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் குருமலையை சேர்ந்த வெள்ளையன், செல்வி, தன்னாச்சி, ராமன்,காளி ஆகிய 5 பேர் உயிரிழந்தனர்.

இவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணமும், முரளி, சித்ரா, கிரமன், முருகன், சீண்டியன், காளியம்மாள், மாரியம்மாள், சின்னகிரமன் ஆகிய 8 பேர் படுகாயம் அடைந்தனர் இவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், சிறு காயங்கள் அடைந்த 4 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் முதல் அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்கப்பட்டது. இதனை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நேற்று உடுமலை தாலுகா அலுவலகத்தில் வைத்து விபத்தில் சிக்கியவர்களின் உறவினர்களிடம் வழங்கினார். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் 3 பேருக்கு முதியோர் உதவி தொகையும், 2 பேருக்கு விதவை உதவி தொகையும் பெறுவதற்கான ஆணையை அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னராமசாமி, உடுமலை கோட்டாட்சியர் அசோகன், வட்டாட்சியர் தங்கவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : accident ,
× RELATED பூந்தமல்லி அருகே கார் தலைகுப்புற...