×

பந்தலூரில் அரசு மருத்துவமனை கழிப்பறைக்கு பூட்டு

பந்தலூர்,டிச.11: பந்தலூர் அரசு மருத்துவமனை கழிப்பறைக்கு பூட்டு போட்டதால் நோயாளிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அரசு மருத்துவமனை தாலுக்கா தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு பல வருடங்கள் ஆகின்றது.ஆனால் இதுவரை அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாததால் உள் நோயாளிகள் மற்றும் புற நோயாளிகள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள்,எக்ஸரே, ஸ்கேனிங் மற்றும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு உணவு சமைக்க சமையலறை மற்றும்  சமையலர் உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லாமல் உள்ளது. இதனால் உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார நோயாளிகள் கேரளா போன்ற பகுதிகளுக்கு சென்று தனியார் மருத்துவமனையில் அதிக கட்டணம் செலுத்தி மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள்  தங்கும் அறைகளில் உள்ள கழிப்பறைகள் மருத்துவமனை நிர்வாகம் உரிய முறையில் பராமரிக்காததோடு, அவற்றுக்கு பூட்டு போட்டதால் இரவு நேரங்களில் நோயாளிகள் கடும் குளிரில் மருத்துவமனைக்கு வெளியே உள்ள கழிப்பறைகளுக்கு  செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இயற்கை உபாதைக்காக மருத்துவமனையை விட்டு வெளியேறும் போது ஏதேனும் ஆபத்துகள் ஏற்படுமோ எனஅச்சம் நோயாளிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. பூட்டி வைத்துள்ள கழிப்பறைகளை திறந்து உரிய பராமரிப்பு வசதிகள் ஏற்படுத்தி தர அரசு மற்றும் சுகாதாரத்துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் வலியுறுத்துகின்றனர்.

Tags : government hospital ,
× RELATED பாளையங்கோட்டை சிறைக் கைதி தப்பி ஓட்டம்