×

குன்னூர் நகராட்சி கமிஷனர் மாறுதலை கண்டித்து துப்புரவு பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

குன்னூர்,டிச.11: குன்னூர் நகராட்சி கமிஷனர் பணியிட மாற்றத்தை கண்டித்து துப்புரவு பணியாளர்கள் நேற்று ஒருநாள் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குன்னூர் நகராட்சி கமிஷனராக சரஸ்வதி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்றார். இவர் பதவியேற்றது முதல் குன்னூர் நகராட்சி மார்க்கெட்டில் பல மாதமாக நிலுவையில் இருந்த வாடகையை வசூலிக்க நடவடிக்கை எடுத்தார். பஸ் நிலையத்தில் உள்வாடகைக்கு விடப்பட்டிருந்த 24 கடைகளுக்கு சீல் வைத்து, அந்த கடைகளை மறு ஏலம் விட முயற்சிகள் மேற்கொண்டு வந்தார். குன்னூர் பகுதிகளில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு வந்த ஆளுங்கட்சியினர் கட்டிடங்கள் உட்பட அனைத்து கட்டிடங்களுக்கும் சீல் வைக்கும் பணிகளை மேற்கொண்டார். ஆளுங்கட்சியினர் அமைச்சரை சந்தித்து வலியுறுத்தியதன் பேரில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு குன்னூர் நகராட்சி கமிஷனர் சரஸ்வதி, வேலூர் மாநகராட்சி உதவி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

கமிஷனர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட தகவல் அறிந்தவுடன், குன்னூர் பகுதி ஆளுங்கட்சி பிரமுகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வந்த கமிஷனர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.இந்நிலையில் நகராட்சி கமிஷனர் சரஸ்வதி பணியிட மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்தும், இடமாற்றத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் குன்னூர் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் சுமார் 150க்கும் மேற்பட்டோர் நேற்று  பணிக்கு செல்லாமல் நகராட்சி அலுவலக வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தூய்மை பணிகள் பாதிப்படைந்தது. இதுகுறித்து துப்புரவு பணியாளர்கள் கூறுகையில்: குன்னூர் நகராட்சி கமிஷனர் சரஸ்வதி பொறுப்பேற்றது முதல் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்றினார். எங்களுக்குரிய அனைத்து சலுகைகளையும் செய்து கொடுத்தார். அவரின் பணியிட மாற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும், என்றனர்.

Tags : Municipal Commissioner ,Coonoor ,commissioner ,cleaning staff ,
× RELATED காலை 5.30 மணி முதல் மாதிரி வாக்குப்பதிவு:...