×

கோவை அரசு மருத்துவமனையில் லஞ்சம் வாங்குவதை தடுக்க ஆலோசனை கூட்டம்

கோவை, டிச. 11: கோவை அரசு மருத்துவமனையில் ஊழியர்கள் நோயாளிகளிடம் லஞ்சம் வாங்குவதை தடுக்கும் வகையில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நேற்ற நடந்தது.    கோவை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் வார்டு, தீவிர சிகிச்சைப்பிரிவு, பிணவறை, ஆர்த்தோ உள்ளிட்ட அனைத்து வார்டுகளிலும் ஊழியர்கள் நோயாளிகளிடம் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது. ஒரு நோயாளியை ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்து செல்ல, ஸ்கேன் எடுக்க அழைத்து செல்ல என அனைத்திற்கும் ஊழியர்கள் நோயாளிகளிடம் இருந்து பணம் வசூலிக்கின்றனர். இது தவிர, குழந்தை பிறக்கும் போது ஆண், பெண் குழந்தைகளுக்கு ஏற்ப தனியாக வசூல் செய்வதாக புகார் அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மருத்துவமனையின் டீன் அசோகன் தலைமையில் கோவை அரசு மருத்துவமனையில் நேற்று மருத்துவமனை ஊழியர்கள், செக்யூரிட்டிகள், நர்சுகளுக்கு சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதில், நோயாளிகளிடம் இருந்து பணம் வாங்க கூடாது எனவும், பணம் பெறுவது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது. மேலும், பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது.   இது குறித்து மருத்துவமனையின் டீன் அசோன் கூறியதாவது: நோயாளிகளிடம் பணம் பெறுவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஊழியர்களுக்கும் அறிவுறுரைகள் வழங்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் கேட்டால் நோயாளிகள் பணம் கொடுக்க கூடாது. இது போன்ற புகார் இருந்தால் உடனடியாக மருத்துவமனையின் ஆர்எம்ஓ-வை தொடர்பு கொள்ள வேண்டும். மருத்துவமனையின் முக்கிய இடங்களில் ஆர்எம்ஓ-விடம் புகார் தெரிவிக்க அவரின் மொபைல் எண் ஓட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Coimbatore Government Hospital ,
× RELATED ரயில் முன் பாய்ந்து ஒரே குடும்பத்தில்...