×

15 லட்சம் தொழிலாளர் பற்றாக்குறை ஜவுளி பொருள் உற்பத்தி 35% முடக்கம்

கோவை, டிச.11: தமிழகத்தில் நூற்பாலை, விசைத்தறி, பின்னலாடை,சைசிங்மற்றும் பிரிண்டிங் ஆகிய ஜவுளி பொருள் உற்பத்தி துறையில் 15 லட்சம்  தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக உற்பத்தி 35 சதவீதம் முடங்கியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் சங்கம் (ஓஸ்மா) தலைவர் ஜெயபால் கூறியதாவது:  ஒவ்வொரு நூற்பாலையிலும் ப்ளோரூம், கார்டிங், டாப்ட், வைண்டிங் உள்பட பல்வேறு பிரிவு உள்ளது. மில்லின் அளவிற்கேற்ப குறைந்தபட்சம் 100 பேர் முதல் ஆயிரம் பேர் வரை பணியாற்றுகின்றனர். 3 ஷிப்ட்களும் நூல் உற்பத்தி நடக்கிறது. இதில் சராசரியாக 3 லட்சம் பேர் பணியாற்ற பணியிடங்கள் உள்ளது. ஆனால், ஒவ்வொரு நூற்பாலையிலும் 35 சதவீதம் பணியாளர்கள் பணியிடம் காலியாக உள்ளது. இதனால், ஒவ்வொரு நூற்பாலையிலும் தொழிலாளர் பற்றாக்குறையால் குறிப்பிட்ட பகுதி இயங்காமல் உள்ளது. இதே போல் விசைத்தறி, பின்னலாடை, சாய ஆலைகள்,சைசிங் மில்கள், பிரிண்டிங் உள்ளிட்ட ஜவுளி உற்பத்தி தொழில் துறை அனைத்திலும் 35 சதவீத தொழிலாளர் பற்றாக்குறை உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக ஜவுளி உற்பத்தி தொழில் நிறுவனங்களுக்கு புதிதாக யாரும் வருவதில்லை. ஆனால், கட்டுமானம், ஓட்டல் ஆகிய பணிகளுக்கு அதிகளவில் புதிதாக வேலைக்கு ஆள் சேர்கிறார்கள். காரணம், கட்டுமான பணியில் தினசரி ரூ.550 வரை சம்பளம் கிடைக்கிறது. ஓட்டலில் ரூ.250 மற்றும் 3 வேளை சாப்பாடு கிடைக்கிறது. ஆனால், அவற்றை விட குறைவாக, விசைத்தறிகளில் ரூ.300 முதல் ரூ.350ம், நூற்பாலைகளில் ரூ.250ம் சம்பளம் வழங்குவதால் புதியவர்கள் வருவதில்லை. விசைத்தறி மற்றும் நூற்பாலைகளில் ஏற்கனவே பணிபுரிபவர்களும் நிலையாக இருப்பதில்லை. இது போல் ஒட்டுமொத்த ஜவுளி உற்பத்தி தொழில் துறையில் ஆள் பற்றாக்குறை கடந்த சில ஆண்டாக அதிகரித்து வருகிறது.

தற்போது கஜா புயல் காரணமாக, டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அவை புனரமைத்து மீண்டும் தொழில் புரிய சில ஆண்டு ஆகும் என்பதால், அங்குள்ள மக்கள் ஆயிரக்கணக்கானோர் ஜவுளி உற்பத்தி தொழில்களுக்கு வரும் மாதங்களில் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். மேலும் வட மாநிலங்களில் இருந்தும் தொழிலாளர்களை அதிகளவில் வரவழைத்து, பணியில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அவர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி அளித்து தயார்படுத்தினாலும், ஜவுளி தொழில்துறையின் வளர்ச்சிக்கேற்ப தொழிலாளர் மற்றும் பணியாளர் பற்றாக்குறை தொடர்ந்து நீடிக்கும் நிலை உள்ளது. இவ்வாறு ஓஸ்மா தலைவர் ஜெயபால் கூறினார்.

Tags :
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்