×

அதிமுக ஆதரவு நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் உடைந்தது

சூலூர், டிச.11:  கட்சி சார்பற்ற  தமிழக விவசாயிகள் சங்கம் அதன் மாநிலத் தலைவர் பொன்னுச்சாமி தலைமையில் இயங்கி வந்தது. இந்நிலையில், அந்த சங்கத்தின் கோவை மாவட்ட தலைமை அலுவலகத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சூலூரில் கடந்த சனிக்கிழமை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில தலைவர் பொன்னுசாமி கலந்து கொள்ளவில்லை. அதற்கு முன்னதாக, கடந்த வாரம் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், 20 தொகுதிகளுக்கு நடக்க உள்ள இடைத்தேர்தலில் அதிமுக.,விற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். இதற்கு பெரும்பாலான விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அமைச்சர் வேலுமணி கலந்து கொண்ட விழாவை பொன்னுசாமி புறக்கணித்தார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை சூலூரில்  கூடிய கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க செயற்குழு கூட்டத்தில் சங்க விதிமுறைகளை மீறியதாக மாநில தலைவர் பொன்னுசாமி, மாவட்ட தலைவர் பாபு ஆகியோரை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், புதிய நிர்வாகிகளும் அறிவிக்கப்பட்டனர். இதுகுறித்து ஏர்முனை இளைஞர் அணி மாநில துணைத் தலைவர் சுரேஷ் கூறுகையில்,`முன்னாள் தலைவர் பொன்னுசாமி மற்றும் பாபு ஆகியோர் சங்க விதிமுறைகளை மீறியதுடன், கள் இறக்கும் விவசாயிகளைத் தவறாக வழிநடத்தி அவர்களிடம் பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டதாலும், விவசாய சங்க நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்க 300 ரூபாய் வாங்கி மோசடி செய்ததாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 டவர்லைன் பிரச்னையில் விவசாயிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து விவசாய நிலங்களை அழிக்க நினைக்கும் அதிமுக.,விற்கு ஆதரவு என்று  கூறுவதை ஏற்க முடியாது’ என்றார். சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட பொன்னுசாமி தரப்பு சார்பில் மாவட்ட தலைவர் பாபு கூறுகையில்,`அதிமுக.,விற்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை. சங்க வரவு செலவுகளை யார் கேட்டாலும் சமர்ப்பிக்க தயாராக உள்ளோம். தங்களை நீக்க எதிரணியினருக்கு அதிகாரமில்லை.  தாங்கள்தான் உண்மையான கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர்’ என்றார்.

Tags : Anti-Party Farmers Union ,AIADMK ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...