×

கீழ்பவானி வாய்க்காலில் நீர் திறப்பு தேதியை அறிவிக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

ஈரோடு, டிச. 11: கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கும் தேதியை மாவட்ட நிர்வாகம் முறையாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கத்தின் சார்பில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோபியில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு துணை தலைவர் கிரி (எ) அருணாச்சலம் தலைமை தாங்கினார். சங்க தலைவர் நல்லசாமி, செயலாளர் தங்கராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இந்த கூட்டத்தில் 11 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பாண்டில் பவானிசாகர் அணை முழு கொள்ளளவை எடடியுள்ளது. நிலுவையில் உள்ள நெல் பயிருக்கு வரும் 25ம் தேதி வரை தண்ணீர் திறக்க வேண்டும். அதற்கு பிறகு மதகுகளை மாற்றி இரட்டைப்படை எண் மதகுகள் கொண்ட ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கரில் கடலை சாகுபடி செய்ய ஜனவரி 1ம் தேதி முதல் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும். இது குறித்து மாவட்ட நிர்வாகம் முறையாக அறிவிப்பு வெளியிட வேண்டும்.

அப்போது தான் விவசாயிகள் விதை, உரம் உள்ளிட்ட இடுபொருட்களை தேடவும், வங்கி கடன் பெறவும், நிலத்தை தயார் செய்யவும் ஏதுவாக இருக்கும். காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது கண்டிக்கதக்கது. நடப்பாண்டில் 170 டி.எம்.சிக்கும் மேலான நீர் பயன்பாடு இல்லாமல் கடலில் கலந்து விட்டது. காவிரி தீர்ப்பில் நாள்தோறும் நீர்பங்கீடு என்ற அம்சத்தை நடைமுறைப்படுத்தியிருந்தால், நடப்பாண்டில் தமிழகத்தில் குறுவை சாகுபடி சாத்தியமாயிருக்கும். மேட்டூர் அணையின் உபரி நீரை ஏரி, குளம், கட்டை, கண்மாய்களுக்கு திருப்பும் திட்டத்தை படிப்படியாக நிறைவேற்றியிருந்தால், காவிரி நீர் வீணாகி இருக்காது. இப்போது மேகதாது அணை கட்டும் எண்ணமும் கர்நாடகாவிற்கு ஏற்பட்டிருக்காது. தமிழக அரசு இவற்றை விவாதித்து உட்பொருளை உணர்ந்து மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முன்வர வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags : Farmers Association ,
× RELATED காவிரி உரிமையை மீட்க போராட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு