×

சத்தியமங்கலம் பகுதியில் வாழை மரங்களை தாக்கும் சருகு நோய்

சத்தியமங்கலம், டிச. 11:  சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் சருகு நோய் தாக்குதலால் வாழை மரங்களின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பவானிசாகர், புஞ்சைபுளியம்பட்டி, கே.என்.பாளையம், அரியப்பம்பாளையம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழை அதிக அளவில் பயிரிடப்படுகிறது.   இதில் குறிப்பாக ரொபஸ்டா, ஜி 9, ஆந்திர ரஸ்தாளி, நேந்திரன், கதலி உள்ளிட்ட ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களாக வாழை மரங்களில் உள்ள இலைகள் மஞ்சள் நிறமாக மாறி புள்ளி புள்ளியாக இலைகள் காய்ந்து சருகாக மாறுகின்றன.

இந்த சருகு நோய் தாக்குதலால் வாழை மரங்களின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நோய் காரணமாக குலை தள்ளும் வாழைத்தாரில் சீப்புகளின் எண்ணிக்கை குறைவதோடு வாழைக்காய்கள் திரட்சி ஏற்படும் முன்னரே பழுக்க ஆரம்பிக்கின்றன.  இதனால் வாழைத்தார்களை வியாபாரிகள் குறைந்த விலைக்கு கேட்பதால், விவசாயிகள் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். நோயை கட்டுப்படுத்த பல்வேறு ரக பூச்சி மருந்துகளை தெளித்தும் நோய் கட்டுப்படவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர்.   இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:  ஒரு ஏக்கர் வாழை பயிரிட ரூ.60 ஆயிரம் வரை செலவாகிறது. வாழையை தாக்கும் சருகு நோய் எனப்படும். இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு செய்து நோயை கட்டுப்படுத்தும் தரமான மருந்தை விவசாயிகளுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : area ,Sathyamangalam ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...