×

கிராம உதவியாளர் மீது தாக்குதல் சம்பவம் வருவாய்த்துறையினர் பணி புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

திருப்போரூர்,டிச.11 : திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய குண்ணப்பட்டு  ஊராட்சியில் பஞ்சந்தீர்த்தி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வாக்காளர்  பட்டியல் பெயர் சரிபார்ப்பு மற்றும் ஆய்வுப்பணி மேற்கொள்ள கடந்த சனிக்கிழமை  மானாம்பதி வருவாய் ஆய்வாளர் தமிழரசன், குண்ணப்பட்டு (பொறுப்பு) வி.ஏ.ஓ.  முருகேசன், கிராம உதவியாளர் சங்கரன் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள்  பஞ்சந்தீர்த்தி கிராமத்தில் அடங்கிய ஜீவா நகர், ஜெகதீஷ் நகர் பகுதிகளில்  நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு அதிகாரிகள் ஆய்வுக்கு  எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பஞ்சந்தீர்த்தி  கிராம உதவியாளர் சங்கரன் தாக்கப்பட்டார்.இந்நிலையில், நேற்று காலை  திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த வருவாய்த்துறையில்  பணியாற்றும் அனைத்து மட்ட அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக  அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், நில அளவையாளர்கள் என அனைத்து ஊழியர்களும்  பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

பஞ்சந்தீர்த்தி கிராம உதவியாளர் சங்கரனை  தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அதற்கான போலீஸ் புகாரை  வட்டாட்சியர் காவல் நிலையத்தில் அளிக்க வேண்டும், இதுபோன்ற அரசு பணிகளை  மேற்கொள்ளும்போது அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று  அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை கூறினர். பின்னர் திருப்போரூர் வட்டாட்சியர்  அலுவலக வாயில் முன்பு அமர்ந்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  நேற்று மாலை 5 மணி வரை அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வட்டாட்சியர்,  கோட்டாட்சியர் என யாரும் வராததால் அனைவரும் போராட்டத்தை கைவிடாமல் அலுவலக  வாயிலிலேயே அமர்ந்திருந்தனர். இதனால் திருப்போரூர் வட்டாட்சியர்  அலுவலகத்தில் அனைத்து பணிகளும் முடங்கின. பட்டா பெயர் மாற்றம், பிறப்பு,  இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வட்டாட்சியர்  அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Tags : attack ,village assistant ,incident ,protesters ,
× RELATED பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கொரோனா...