×

கேளம்பாக்கத்தில் மழைநீர் கால்வாய் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம், டிச.11: காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கத்தில் தொடங்கிய மழைநீர் கால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கேளம்பாக்கம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் தலைவர் அமிர்தசேகர், செயலாளர் ஜெய்சந்த், பொருளாளர் சுவாமிநாதன் ஆகியோர் மாவட்ட கலெக்டர் பொன்னையாவிடம் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனு விவரம்:  கேளம்பாக்கம் பழைய மாமல்லபுரம் சாலையில் மழைநீர் கால்வாய் பணி முழுமையாக முடிக்கப்படாமல் பாதி அளவே முடித்து  2 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் சாலையின் இருபுறமும் தண்ணீர் தேங்கி விடுகிறது. பொதுமக்கள் நடக்க முடியாமலும், வியாபாரிகளுக்கு சிரமமாகவும் உள்ளது. எனவே கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தச் சாலையின் ஓரங்களில் அதிக அளவு மணல் சேர்ந்து விடுவதால் டூவீலரில் செல்வோர் சறுக்கி விழுந்து விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, சாலையின் ஓரமாக உள்ள மணல்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கேளம்பாக்கம் பஜார் ரோடு, தையூர் மார்க்கெட் ரோடு, பழைய மாமல்லபுரம் சாலை மற்றும் கோவளம் சாலைகளில் இருபுறமும் தள்ளுவண்டி கடைகள், பிளாட்பார கடைகள் வைத்து ஏராளமானோர் தொழில் செய்கின்றனர். இதனால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே அந்தக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED ஏரிகளில் நீர் இருப்பு, கடல்நீரை...