×

முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 20 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

காஞ்சிபுரம், டிச.11: காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல துறை சார்பில் படைவீரர் கொடி நாளை முன்னிட்டு  தாம்பரம் சங்கரா வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தேனீர் விருந்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட  கலெக்டர் பொன்னையா 20 பயனாளிகளுக்கு ₹7லட்சத்து 31ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  மேலும் அவர் பேசியதாவது: ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 7 ம்நாள் நாடெங்கிலும் முப்படைவீரர் கொடிநாள் தினம் அனுசரிக்கப்படுகிறது. நாடு காத்த படை வீரர்கள், நாடுகாக்க உயிர்நீத்த படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் தியாகத்தை நினைவு கூரும் வண்ணம் படைவீரர் கொடி நாள் அனுசரிக்கப்படுகிறது. இத்தினத்தில் முப்படைகளின் நிறம் பதிந்த கொடிகள், பொதுமக்கள் அணியும் வண்ணம் வழங்கப்பட்டு நாடு காக்கும் நமது முப்படையினரின் நினைவு கொள்ள வைக்கிறது. தமிழ்நாட்டில் முன்னாள் படை வீரர்களை மேலும் கௌரவிக்கும் வண்ணம் மாவட்டங்கள் வாரியாக மாவட்ட கலெக்டர், முன்னாள் படை வீரர்களை அழைத்து தேநீர் விருந்து வழங்கும் முறை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. இவ்வாய்ப்பு எனக்கு கிடைத்தமைக்கு நாம் அனைவரும் ஒருங்கே சேர்ந்து இருப்பது குறித்தும் நான் மிகவும் பெருமிதம் அடைகிறேன். இக்கொடி நாளுக்காக நாடு முழுவதும் மாவட்டந்தோறும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நிதி திரட்டப்படுகிறது.

அவ்வாறே, 2017ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ரூபாய் 2,02,07,000/- இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் ரூ 4,40,32,324/- வசூலிக்கப்பட்டுள்ளது . மேலும் கொடிநாள் நிதி வசூலில் அதிக அளவு நிதி வசூல் செய்து  காஞ்சிபுரம் மாவட்டம் தமிழ்நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விலக்கினை எய்திடும் வகையில் செயல்பட்ட மாவட்டங்களில் உள்ள பல்வேறு துறை அலுவலர்களின் சீரிய முயற்சிக்கும், இலக்கிற்கும் அதிகமாக கொடி நாள் வசூல் செய்தமைக்கும் எனது மனமார்ந்த பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இக்கொடி நாள் மூலம் வசூல் செய்யப்படும் நிதி முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களின் பல்வேறு நலத்திட்டங்களுக்காக செலவிடப்படுகிறது. 2018ம் ஆண்டிற்கு ரூபாய் 2,22,27,700/- இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனையும் மிஞ்சி வசூல் இலக்கினை எய்திடவும், சீரிய முயற்சியினை மேற்கொள்ளுமாறு துறை அலுவலர்களை கேட்டுக்கொள்கிறேன்.பொதுமக்களையும் கொடிநாள் நிதிக்கு தாராளமாக நிதி அளித்திட வேண்டுகிறேன். இந்நிகழ்ச்சியில்  சங்கரா வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் ராமகிருஷ்ணன் டிரஸ்டி சீதாராமன், படை வீரர் நலம் உதவி இயக்குநர்  மேஜர் ரூபா சுப்புலட்சுமி, முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, ஜாக்லி படையைச் சேர்ந்த கேப்டன் அபிஷேக் சிங் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags : Veterans Welfare ,
× RELATED சீர்மரபினர் நல வாரிய தலைவர்,உறுப்பினர்கள் முதல்வரிடம் வாழ்த்து