×

அடிப்படை வசதியில்லாத கேளம்பாக்கம் ஜோதி நகர் : அவதிப்படும் பொதுமக்கள்

திருப்போரூர், டிச.11: சென்னையை அடுத்த புறநகர் பகுதியான கேளம்பாக்கம்  ஊராட்சியில் கோவளம் செல்லும் சாலையில் ஜோதிநகர், மஜீத் நகர், மூகாம்பிகா  நகர் ஆகிய மனைப்பிரிவுகள் உள்ளன. இப்பகுதியில் சுமார் 1500க்கும் மேற்பட்ட  குடியிருப்புகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 10  ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை.  குறிப்பாக ஜோதி நகரில் இரண்டு பிரதான சாலைகளும், 20க்கும் மேற்பட்ட  குறுக்குத் தெருக்களும் உள்ளன. இவை அனைத்தும் இன்னும் மண் சாலைகளாகவே  உள்ளன. இங்கு வசிப்பவர்கள்  முறையாக சொத்து வரி, வீட்டு வரி செலுத்தி வருகின்றனர். இருப்பினும் உள்  கட்டமைப்பு வசதிகளான சாலை அமைத்தல், கழிவுநீர் கால்வாய், மழை நீர்  வடிகால்வாய் அமைத்தல், மின் கம்பங்கள் அமைத்தல் போன்ற பணிகள் எதுவும்  நடைபெறவில்லை.

மழை நீர் வடிகால்வாய் இல்லாததால் வீடுகளில் இருந்து  வெளியேறும் கழிவுநீர் தெருக்களில் தேங்கி நிற்கிறது. இவற்றில் கொசுக்கள்  உற்பத்தியாகி குழந்தைகளுக்கு நோயை பரப்புகின்றன. மழைக்காலங்களில் பெய்யும்  வெள்ளநீர் வடியாததால் தண்ணீர் தேங்கி வெளியேற முடியாமல் சாலை முழுவதும்  மாதக்கணக்கில் நிற்கும் அவலம் உள்ளது. ஜோதி நகர் மற்றும் மஜீத் நகர் பகுதி  மக்களுக்காக கேளம்பாக்கம் ஊராட்சி சார்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி  அமைக்கப்பட்டது. ஆனால் இது இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால்  தெருக்குழாய்களில் குடிநீர் வருவதில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் காலி  குடங்களுடன் கேளம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே வரை நடந்து சென்று  குடிநீர் கொண்டு வர வேண்டிய நிலை உள்ளது. எனவே, அரசு நிர்வாகம் இப்பகுதி பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை  செய்து தர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Jyoti Nagar ,Kolambakkam ,
× RELATED மாணவி கடத்தல் வாலிபர் மீது புகார்