×

சொத்தை அபகரிக்க முயற்சிப்பதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

காஞ்சிபுரம், டிச.11:  காஞ்சிபுரம் மாவட்டம், நாவலூரைச் சேர்ந்த  சாந்தகுமாரி, அவரின் கணவர் நடராஜன், மகன் சதீஷ் ஆகிய மூவரும் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக நடராஜன் மனைவி சாந்தகுமாரி மாவட்ட போலீஸ் எஸ்பி சந்தோஷ் ஹதிமானியிடம் அளித்துள்ள புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டம், நாவலூர் பஜனை கோயில் தெருவில் என் தகப்பனார் தட்சிணாமூர்த்தி சுயமாக கிரையம் வாங்கிய சொத்து உள்ளது. இந்த சொத்தில் அப்பா உயிரோடு இருக்கும்போது எனக்கு பாகப்பிரிவினை கொடுத்தது. என்னுடைய அப்பா 2011ம் ஆண்டு காலமாகி விட்டார். இதனைத் தொடர்ந்து என் குடும்பத்தாருடன் 2011ம் ஆண்டுமுதல் வீடுகட்டி வசித்து வருகிறேன். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நாவலூர் முன்னாள் தலைவர் அதிமுக பிரமுகர் ரகு என்பவர் எங்கள் இடத்திற்கு சில ஆட்களை கொண்டுவந்து, இந்த இடத்தை உடனே காலிசெய்ய வேண்டும், இல்லையென்றால் ஆட்களை வைத்து விரட்டுவேன் என்று மிரட்டினார். இதுகுறித்து நாவலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். காவல் நிலையத்தில் விசாரணை செய்த அதிகாரி இது சிவில் வழக்கு என்பதால் நீதிமன்றத்தை அணுகுமாறு கூறிவிட்டார். அதன்பின்னர் ரகு என்பவர் தொடர்ந்து அடிக்கடி மிரட்டி வந்தார். எனவே செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளேன்.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் முதல் அதிமுக பிரமுகர் ரகு மற்றும் அவரது தம்பி ராஜா மற்றும் அடையாளம் தெரியாத சுமார் 50 நபர்கள் என் வீட்டுப் பகுதியில் அராஜகமாக நுழைந்து வீட்டின் கேட்டை உடைத்து காலி இடத்தில் கொட்டகை போட்டனர். இதனை தட்டிக்கேட்ட என் கணவரை அடித்துத் தள்ளிவிட்டு யாரும் கிட்ட வரக்கூடாது, வந்தால் வெட்டிவிடுவோம் என்று இரண்டு நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டினர். மேலும் அங்கேயே 10க்கும் மேற்பட்டவர்கள் தங்கி மது அருந்தி அட்டகாசம் செய்தனர். இதுவரை அங்கேயே தங்கி மது அருந்திவிட்டு அசிங்கமான வார்த்தைகளால் எங்களை பேசி வருகின்றனர். இதனால் எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, எங்கள் சொத்தில் அத்துமீறி உள்ளே நுழைந்தவர்களை வெளியேற்றி, எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.

இந்நிலையில் மனு கொடுத்துவிட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த சாந்தகுமாரி மற்றும் அவரின் கணவர் நடராஜன், மகன் சதீஷ் மூவரும் கலெக்டர் அலுவலக வாசலில் திடீரென மண்ணெண்ணெய்யை தங்களின் உடல்மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர். மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்த காவலர்கள் உடனடியாக எஸ்பி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் ஒரே நாளில் இரண்டு தீக்குளிப்பு முயற்சி சம்பவங்கள் நடைபெற்றதால் கலெக்டர் அலுவலகம் பரபரப்புடன் காணப்பட்டது. கடந்த ஜூலை மாதம் எஸ்பி அலுவலகம் அருகே விவசாயி ஒருவர் நிலப்பிரச்சினை தொடர்பாக தீக்குளிக்க முயற்சி மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் நடைபெறும் நாட்களில் கலெக்டர் அலுவலக இரண்டு மெயின் கேட் பகுதிகளிலும் பாதுகாப்பு போடப்பட்டு சோதனை செய்யப்பட்டு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் தொடர்ந்து இந்ந நடைமுறை பின்பற்றப்படவில்லை. எனவே, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க நிரந்தரமாக மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு வழங்கினால் நன்றாக இருக்கும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : office ,Collector ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற...