×

ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள தள்ளுவண்டி கடைகள் சாலையோர கையேந்தி பவன்களை அகற்ற கோரி ஓட்டல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்போரூர், டிச.11. சென்னையை ஒட்டிய புறநகர் பகுதியான ஓ.எம்.ஆர். சாலையில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள், கல்லூரிகள், ஷாப்பிங் மால்கள் உள்ளன. சென்னையில் உள்ள அனைத்து பிரபல ஒட்டல்களும் கந்தன்சாவடி முதல் கேளம்பாக்கம் வரை ஓ.எம்.ஆர். சாலையின் இருபுறமும் தங்களது கிளைகளை திறந்து உள்ளன. இந்நிலையில் இந்த சாலையில் உள்ள மென்பொருள் நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றில் வடமாநில தொழிலாளர்களும், உள்ளூர் தொழிலாளர்களும் வேலை செய்கின்றனர். மேலும், அடுக்குமாடி குடியிருப்புகள், ஏ.டி.எம்.கள், ஷாப்பிங் மால்களில் ஏராளமான செக்யூரிட்டி தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இவர்களால் இதுபோன்ற விலை உயர்ந்த ஓட்டல்களில் சென்று சாப்பிட முடியாத நிலை உள்ளது. இதனால் உயர்ரக ஓட்டல்களுக்கு ஈடாக தள்ளுவண்டி கடைகள், மொபைல் உணவகங்கள், கையேந்தி பவன்களும் உருவாகி உள்ளன. இவற்றில் விலை குறைவாக இருப்பதாலும், உடனுக்குடன் தயாரித்து சூடாக தருவதாலும் மென்பொருள் பொறியாளர்களும், மாதம் 1 லட்சம் வரை சம்பாதிக்கும் உயர் வருவாய் பிரிவினரும் கூட இந்த மொபைல் உணவகங்களுக்கு செல்லத் துவங்கினர்.

இந்நிலையில் இந்த உணவகங்களால் தங்களது வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறி ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள ஓட்டல் அதிபர்கள் இச்சாலையை பராமரிக்கும் டி.என்.ஆர்.டி.சி. எனப்படும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தாழம்பூர் போலீசாரிடம் முறையிட்டனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் டி.என்.ஆர்.டி.சி. நிறுவனத்தைக் கண்டித்து நேற்று ஒருநாள் அடையாள கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாவலூர் பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக அனைத்து சைவ மற்றும் அசைவ ஓட்டல் உரிமையாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் அதன் தலைவர் செந்தில் தலைமை தாங்கினார். இதில் 100க்கும் மேற்பட்ட ஓட்டல் உரிமையாளர்கள் கலந்து கொண்டு சாலையோர உணவகங்களை அகற்றக் கோரி கோஷமிட்டனர். இதையடுத்து தாழம்பூர் போலீசார் அங்கு வந்து இந்த கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர், எஸ்.பி மற்றும் டி.என்.ஆர்.டி.சி நிறுவனத்திற்கு தகவல் அனுப்பி உள்ளதாகவும், விரைவில் சாலையோரக் கடைகள் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என உறுதி அளித்துள்ளதாகவும் கூறி போராட்டத்தை கைவிட கேட்டுக் கொண்டதன் பேரில் போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.

Tags : Oemar ,Demolition ,protesters ,removal ,
× RELATED NCERT பாடப்புத்தகங்களில், பாபர் மசூதி...