×

சுங்குவார்சத்திரம் பஸ் நிலையம் அருகே திருமங்கலம் சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீர்

பெரும்புதூர், டிச. 11:  பெரும்புதூர் ஒன்றியம் திருமங்கலம் ஊராட்சியில் சுங்குவார்சத்திரம் பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பஸ் நிலையம் அருகில் சாலையின் இருபுறமும் காய்கறி, ஓட்டல், ஆடு, கோழி இறைச்சி கடைகள் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமான கடைகள் உள்ளது. இந்த கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சாலையில் இருபுறமும் பல ஆண்டுகளாக ஆறாக ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசிவருகிறது. சுங்குவார்சத்திரம் முதல் தேசிய நெடுஞ்சாலை இணைப்பு சாலை வரையில் பெரும்புதூர் கோட்ட நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் சாலையின் இருபுறமும் மழைநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வசதி இல்லாததால் சாலையில் தேங்கி உள்ளது.

திருமங்கலம் பகுதியில் சாலையை ஒட்டி கால்வாய் மற்றும் சாலை வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும் என்று இப்பகுதி மக்கள் காஞ்சிபுரம் கலெக்டர், பெரும்புதூர் கோட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பல முறை கோரிக்கை மனுக்கள் கொடுத்துள்ளனர். ஆனால் இன்றுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருக்களில் தேங்கி திருமங்கலம் பஜார் வீதி முழுவதும் துர்நாற்றம் வீசிவருகிறது. மேலும் அப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் 3 முறையும், பெரும்புதூர் கோட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம், 3 முறையும், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் 6 முறையும் கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சுங்குவார்சத்திரம் மக்கள் நல்வாழ் சங்கம் சார்பில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று சேர்த்து வாயில் கருப்பு துணி கட்டி நேற்று ஒருநாள் முழுவதும் எங்கள் எதிர்ப்பை மௌனப் போராட்டமாக நடத்தி உள்ளோம். ஆனால் அரசு துறை அதிகாரிகள் மவுனமாக உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Senguparathiram ,bus station ,road ,Tirumangalam ,
× RELATED பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓசூர் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதல்