×

வெண்பேடு கிராமத்தில் பொதுப்பணித்துறை துணையுடன் ஏரி மண் கொள்ளை

திருப்போரூர், டிச.11: கடந்த 2016ம் ஆண்டு பெய்த மழை மற்றும் வர்தா புயலின் காரணமாக சேதமடைந்த ஏரிகளை புனரமைக்கும் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஏரிகளை தூர் வாரி கரைகளை பலப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய வெண்பேடு கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. சுமார் 140 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி மூலம் வெண்பேடு, காட்டூர் கிராமங்களைச சேர்ந்த 1000 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில் இந்த ஏரியை தூர் வாருவதாக கூறி ஏரி மண்ணை அள்ள தனியார் முடிவு செய்து மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டனர். கிராம மக்களின் கருத்து கேட்கப்படாமல் தூர் வார அனுமதி அளிக்கப்பட்டதாக தெரிகிறது. சுமார் 4410 லோடு ஏரி மண்ணை அகற்றி அப்புறப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று காலை 4 பொக்லைன் இயந்திரங்களுடன் தனியார் ஒப்பந்தக்காரர்களை வெண்பேடு கிராம பொது மக்கள் சிறை பிடித்தனர். மேலும் மண்ணை எடுத்துச் செல்ல வந்த லாரிகளையும் மடக்கிப் பிடித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்போரூர் போலீஸ் எஸ்.ஐ. கோதண்டன், வெண்பேடு வி.ஏ.ஓ. துளசி மற்றும் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அண்மையில் பெய்த மழையின் காரணமாக ஏரியில்  தண்ணீர் பெருமளவு தேங்கி உள்ளது. 800 ஏக்கர் நிலத்தில் இந்த நீரை நம்பி விவசாய பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இவ்வாறு இருக்கும்போது ஏரியில் மண் எடுக்க அனுமதி கொடுத்தது எப்படி என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். ஏரியை தூர் வாரி உபரி மண்ணை அகற்ற வேண்டும் என்றும் சராசரியாக 4410 லோடு மண் (ஒரு லாரிக்கு 2 யூனிட் வீதம்) வரை அகற்ற வேண்டும் என்றும்  மாவட்ட ஆட்சியரின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. ஆனால் பொதுப்பணித்துறையின் உதவியோடு இங்கு இரவு, பகலாக ஒரு நாளைக்கு 2000 லோடு வீதம் எடுக்க லாரிக்காரர்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும், ஒரு லோடு மண் 4500 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

ஆனால் அரசு கணக்கில் 1000 ரூபாய் மட்டுமே கணக்கு காட்டப்படுகிறது. அதுவும் 4410 லோடு மண் அள்ள கணக்கு காட்டி விட்டு 20 ஆயிரம் லோடு வரை சட்ட விரோதமாக மண் அள்ள ஒப்பந்ததாரர்கள் தயார் நிலையில் உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.  இதனால் மாவட்ட நிர்வாகத்திற்கு சுமார் 8 முதல் 10 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக அவர்கள் கூறினர். பொதுமக்களின் போராட்டத்தால் லாரிகளில் ஏற்றப்பட்ட மண்ணை எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து போலீசாரும் வருவாய்த்துறையினரும் பொதுமக்களிடம் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு லோடு ஏற்றிய 10 லாரிகளை மட்டும் வெளியே செல்ல அனுமதி அளிக்குமாறும், பொதுமக்களின் அனுமதி இல்லாமல் மண் எடுக்க தடை விதிப்பதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து அந்த லாரிகள் மட்டும் அனுப்பப்பட்டன. மற்ற லாரிகள் மண் அள்ள அனுமதியின்றி திருப்பி அனுப்பப்பட்டன. பொதுமக்களும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.  

Tags : lake ,land ,village ,Wellpadu ,
× RELATED குண்ணம் ஊராட்சியில் தனியார்...