×

தாழக்குடி குளக்கரையில் 8 லட்சத்தில் கட்டப்பட்ட நவீன கழிப்பிடம் இடிப்பு

ஆரல்வாய்மொழி, டிச.11:  தாழக்குடியில் குளத்தின் கரையில் ரூ. 8 லட்சத்தில் கட்டப்பட்ட  நவீன கழிப்பிட கட்டிடத்தினை பொதுப்பணித்துறையினர் இடித்தனர். தாழக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட கனகமூலம் குடியிருப்பு அருகே புளியூர் குறிச்சி குளம் உள்ளது. இக்குளத்திற்கு புத்தனார் கால்வாயில் இருந்து தண்ணீர் வருகிறது. இக்குளத்தின் மூலம் பல நூறு ஏக்கர் விளை நிலங்கள் பயன் பெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்த 2011- 12ம் ஆண்டில் கனகமூலம் குடியிருப்பு பகுதி மக்களின் வசதிக்காக தாழக்குடி பேரூராட்சியின் பொது நிதியில் இருந்து ரூ.8 லட்சம் செலவில் 8 அறைகள் கொண்ட நவீன சுகாதார கழிப்பிடம் புளியூர்குறிச்சி குளத்தின் கரையின் அருகே கட்டப்பட்டது. இக் கட்டிடம் கட்டுவதற்கு சில தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கழிப்பிடத்திற்கான செப்டேக் டேங்க் குளத்திலேயே அமைத்து மூடப்பட்டு இருந்தது. இக்குளத்தில் தண்ணீர் பெருகினால் செப்டிக் டேங்கில் தண்ணீர் பெருகி குளத்தில் உள்ள தண்ணீர் முழுவதிலும் சுகாதார கேடு ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதுதொடர்பாக பொதுப்பணித்துறைக்கு புகார்கள் சென்ற வண்ணம் இருந்தன.

 இதன் அடிப்படையில் பொதுப் பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட நவின கழிப்பிடத்தினை இடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. நேற்று காலை பொதுப் பணித்துறை உதவி செயற்பொறியாளர் லாரன்ஸ் தலைமையிலான ஊழியர்கள் பொக்லைன் இயந்திரம்  உதவியுடன் நவீன கழிப்பிடத்தினை இடித்தனர். கட்டிடம் இடிக்கப்பட்ட இடத்திற்கு  பேரூராட்சி செயல் அலுவலர் யோகீஸ்வரி, வருவாய் அதிகாரி அருணா மற்றும்  ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகேஷ்வரராஜ் ஆகியோர் வந்தனர். அப்போது அங்கு கூடிய பொது மக்கள், அரசு நிதி ரூ. 8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இந்த நவீன கழிப்பிட கட்டிடத்தினை கட்ட தொடங்கியதுமே அதிகாரிகள் தடுத்து நிறுத்தி இருந்தால் அரசுபணம் வீணாகும் நிலை ஏற்பட்டு இருக்காது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதுபோன்று பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டிடம் கட்டுவதனை தடுத்து நிறுத்த வேண்டும். பேரூராட்சி நிர்வாகம் பொது பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டிடம் கட்ட வேண்டும் என்றால் முறையான அனுமதி பெற்று கட்ட வேண்டும் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags : toilet demolition ,hut ,Thalakudy ,
× RELATED இருளர் குழந்தைகளுக்காக ஒற்றை குடிசைக்குள் இயங்கும் ‘அலை!’